இளைஞர்களுக்கு வழிவிடுங்க.. திமுக தோல்விக்கு சீனியர்களின் செயல்பாடும் காரணம்! நேரடியாக சாடிய ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என்று நினைத்தால், கட்சியில் அவர் மட்டும்தான் இருப்பார் என்று கூறியுள்ள ஸ்டாலின், கட்சிக்கு இளையோர் வரும் போது அவர்களை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் பல அதிரடியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்படுவதாகவும், மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வச்சவரம்பாக 70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி ஒவ்வொரு பதவியிலும் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தற்போது மாவட்டச் செயலாளர்களாக இருக்கக் கூடியவர்களில் 13 பேர் பொறுப்புகளை இழக்கும் சூழல் நேரிட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், தமிழக வரலாற்றில் திமுக பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. நாம் தேர்தலில் தான் தோல்வி அடைந்துள்ளோம்.. இது ஒன்றும் நிரந்தரமான தோல்வி கிடையாது.
திமுக தோல்விக்கு பல காரணங்களும் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று.. அதனை நாம் மறைக்க தேவையில்லை. விளக்கடியில் இருக்கும் இருள் போல் நமது காலடியில் இருந்த தவறுகளை நாம் காண தவறிவிட்டோம். நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.. வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். மூத்தவர்கள் இளையவர்களை வரவேற்க வேண்டும்.
தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என்று நினைத்தால், கட்சியில் அவர் மட்டும்தான் இருப்பார். இளையவர்களை வரவேற்று வழிநடத்த வேண்டும். போரடிக்கிறது என்று அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல நாம்.. போராட வந்தவர்கள்.. கட்சியின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்து கொள்ள வேண்டும்.
எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் பாதிக்கப்படுவது 75 ஆண்டு கால கழகம்தான். திமுக தொடங்கி 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட வலிமையாக இருப்பதற்கு அதன் அமைப்பு முறை தான் காரணம். அந்த அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய போகிறோம். ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகள் வழக்கம்.
திமுக வரலாற்றில் இது முக்கியமான செயற்குழுவாக உள்ளது. கம்பேக் கொடுப்பதில் தாம் நாம் ஸ்பெஷலிஸ்ட்.. அந்த கம்பேக்கை சிறப்பாக கொடுப்போம். அதேபோல் சட்டசபையை சினிமா செய்ட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார் இப்போதைய முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
