கட்சி தாவிய மாஜிக்கு திமுகவில் கிடைத்த முக்கிய பதவி.. அடுத்த ஸ்கெட்ச் போடும் ‘பொறுப்பு’ அமைச்சர்!
சென்னை : அதிமுகவில் இருந்து விலகி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிமுக பிரமுகர்களுக்கும் வலை வீசி வருகிறாராம் பொறுப்பு அமைச்சர்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் மோதல் வெடித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி தரப்பினரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கேபி முனுசாமி, சிவி சண்முகம் என ஈபிஎஸ் ஆதரவு முன்னணி தலைவர்களை பிரஸ் மீட்டில் சரமாரியாக விளாசி வந்தார் கோவை செல்வராஜ்.
ஓபிஎஸ்ஸின் வலதுகரமாக : ஓபிஎஸ்ஸுக்கு வலதுகரமாக நின்று எடப்பாடி தரப்பை வச்சு செய்து வந்த கோவை செல்வராஜ், பின்னர் ஓபிஎஸ் செயல்பாடுகளால் கடுமையாக அதிருப்தி அடைந்தார். கோவையில் பொதுக்கூட்டம் நடத்த ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்ட நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் என்றும் பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன்வைத்தார் கோவை செல்வராஜ். இதையடுத்து, ஓபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ : முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ், காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அங்கிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சி திமுகவின் பிடியில் இருப்பதாக பல மேடைகளில் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து அதிமுகவில் இருந்து வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் - எடப்பாடி பிளவால் அங்கிருந்து திமுகவில் சேர்ந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது, கோவையை திமுகவின் கோட்டையாக நிச்சயம் மாற்றுவோம் எனத் தெரிவித்திருந்தார் கோவை செல்வராஜ்.

திமுகவில் முக்கிய பொறுப்பு : திமுகவில் அவர் இணைந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திமுக தலைமை அவருக்கு பதவி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செய்தி தொடர்பு துணைச் செயலாளராக கோவை செல்வராஜை நியமித்துள்ளது திமுக தலைமை.
கோவை செல்வராஜ் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், அதிமுக கோவை பிரமுகர்களுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு இழுக்க கோவையின் பொறுப்பு அமைச்சர் திட்டமிட்டிருப்பதாகவும் கோவை திமுக வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications