மனு கொடுக்க மக்கள் அலையவேண்டாம்! சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் QR Code! ஒரு ஸ்கேன் செய்தால் போதும்
சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள், புகார்களை, இருக்கும் இடத்தில் இருந்தே தெரிவிக்க QR Code மென்பொருள் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே QR Codeல் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் என்பது அதன் சிறப்பம்சமாகும்.

தமிழ்நாடு அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பதை வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் துறை தோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு நடவடிக்கையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதத்தில் டிஜிட்டல் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை உறுதிப்படுத்திடவும், வெளிப்படைத்தன்மையோடு தகவல் பரிமாற்றம் செய்து அரசின் நிர்வாக செயல்பாடுகளின் விவரங்களையும் சேவைகளையும் மக்கள் அடைந்திடவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2022-23ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பணி மற்றும் சேவைகளை நிகர்நிலையில் கண்காணிக்கவும், பணிகள் குறித்த விபரங்களை மக்கள் தெரிந்து கொள்ளவும், பணி மற்றும் சேவை குறித்த மக்களின் கருத்துக்களை விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் கோடு) போன்ற செயலிகள் மூலம், நிகர்நிலையில் தெரிவித்திடவும் சிறப்பான சீர்மிகு ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தற்போது வலைசெயலி மூலம் நகரில் உள்ள கட்டமைப்புகளை உள்ளடக்கிய வரைபடம் தயாரிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப முறையில் விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் கோடு) ஒவ்வொரு அரசு சார் கட்டமைப்புகள், தனியார் வரிவிதிப்பு கட்டமைப்பிற்கும் உருவாக்கியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான "விரைவு துலங்கல் குறியீடு - QR Code" மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார்.
இந்த விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும். இந்த விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகுறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியினை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.
மேலும், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலி மூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே விரைவு துலங்கல் குறியீடு (க்யூஆர் குறியீடு) ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.
இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலைப்பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications