குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசின் வேகம்.. ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்!
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. அதேபோல் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள் இதற்கு கடுமையாக கண்டனங்கள் தெரிவித்தன. இந்த 3 கல்லூரிகளில் நடப்பாண்டு 500 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் இங்கே மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
வருகை பதிவேடு: இந்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முக்கியமான காரணம் சொல்லப்பட்டது. அதன்படி வருகை பதிவேட்டிற்கு பயோ மெட்ரிக் முறை கடைபிடிக்கப்படவில்லை, சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லை, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன.
இதனால் இதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்திற்குள் முறைகேடுகள் சரி செய்யப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல் திருச்சி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கும் மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர்.
தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கண்டனம்: முன்னதாக இந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில், தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் ரத்து செய்யப்பட்ட ஏற்பளிப்பை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. அவ்வாறு எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 1400 பேராசிரியர் பணியிடங்களில் ஏறக்குறைய 450 பணியிடங்களும், 1600 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 550 பணியிடங்களும் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகள் தவிர மீதமுள்ள பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நிறைவு செய்ய இயலாது.
இருக்கும் பேராசிரியர்களை பணி நிரவல் செய்தாலும் கூட, தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏறக்குறைய 40%, அதாவது 10 கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவற்றின் ஏற்பளிப்பு நீக்கப்படக் கூடும், என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications