விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கூட்டணிகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான நட்புகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் சுக்குநூறாக உடைந்து போன நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது திமுகவினரால் இன்னும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். "காலாவதியான சக்தி", "அழுகிப்போன அதிகாரம்" என திமுகவை சாடிய அவரது பேச்சு அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ. ராசா மற்றும் முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்களின் பதில்கள் பொதுமக்கள் மத்தியிலோ, சமூக ஊடகங்களிலோ திமுகவினரைத்தாண்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், புதிய அரசின் மீது திட்டமிட்ட அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தவெக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தீவிர எதிர்ப்பிரச்சாரம் நடைபெறுவது திமுகவின் ஐடி விங்குக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் திமுக சமீபத்தில் "ஜென்-இசட் திமுக" என்ற பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆனால் இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. புதுமையான அரசியல் நகர்வு எனத் தொடங்கிய இந்த முயற்சி நெகட்டிவ் ட்ரெண்டாக மாறி திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இத்தகைய தொடர் பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் முக்கியப் பொறுப்பை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு ஒப்படைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக கனிமொழி வெளியிட்டுள்ள ஆக்ரோஷமான அறிக்கைகள் மற்றும் தவெக அரசின் 'சிங்கப்பெண் சிறப்புப் படை' திட்டத்தின் தாமதம் குறித்த கேள்விகள் பெண் வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கனிமொழியின் முதிர்ச்சியான பேச்சும், வலுவான ஆளுமையும் விஜயின் அரசியல் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் என ஸ்டாலின் நம்புவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் தவறுகள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உடனுக்குடன் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தவெக தரப்பில் இருந்து வரும் எந்த குற்றச்சாட்டுக்கும் உடனடியாக (Instant Rebuttal) வலுவான ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கியமாக விஜயிடம் இருக்கும் பெண் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க கனிமொழி மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறாராம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சொற்ப காலமே ஆகியிருந்தாலும், தவெக அரசுக்கு எதிராக விமர்சனங்களை தீவிரப்படுத்த கனிமொழியை முன்னிறுத்தி திமுக தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தீவிரம் காட்டி வருகிறது. ஸ்டாலினின் இந்த புதிய அரசியல் வியூகம் எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை நேரம் தான் சொல்லும். தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. திமுக-தவெக இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications