பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்? டக்கென வந்த கேள்வி.. கருணாநிதி ஸ்டைலில் பட்டென சொன்ன முதல்வர்!
சென்னை: இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவீர்களா என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கருணாநிதி பாணியில், “என் உயரம் எனக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.

அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிtட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்தார். அதே போல் பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி முன்னிலையில் இருந்து வந்தார். இந்த இரண்டு தொகுதிகளிலும் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும், தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2004க்குப் பிறகு 40க்கு 40 என சொல்லி அடித்துள்ளது திமுக. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், “இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி. கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டு இது. நாடாளுமன்ற வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம் என்று கூறி இருந்தேன். இந்த தேர்தல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க தொடர்ந்து பணியாற்றுவோம்.
இந்தியாவைக் காப்போம் என்ற உறுதிமொழியை வழங்கி, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி. கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது மீதமுள்ள 1 தொகுதியையும் சேர்த்து நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை உடைத்தெறிந்து நாம் பெற்றுள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை தொடுத்தது பாஜக. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய பாஜகவால் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், “நாளை டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் டெல்லி செல்கிறேன். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “ஏற்கெனவே பலமுறை இதற்குப் பதில் அளித்துவிட்டேன். கலைஞர் சொன்னது தான். என் உயரம் எனக்குத் தெரியும்” என்றார்.












Click it and Unblock the Notifications