நீதியும் நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை! முதல்வர் ஸ்டாலின் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம்!
சென்னை: நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்த ஒன்று என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இதனை மிகவும் பெருமையாக அவர் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் பேசியதாவது;

நீதியும் நேர்மையும்
நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்டவை. அதற்கான சான்றுகள் தமிழிலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. வள்ளுவரும், இளங்கோவடிகளும், புறநானூற்றுப் புலவர்கள் பலரும், நீதியின் மேண்மையைப் பற்றியும், செங்கோல் வழுவாமையின் சிறப்பினைப் பற்றியும், எப்போதும் உயர்த்திப் பிடித்துள்ளார்கள். அத்தகைய ஒரு திராவிட மரபுவழி வந்த நம் பண்பாட்டில் வளர்ந்த இந்த அரசு, அதே உயர்ந்த இடத்தில் நீதித்துறையை வைத்து, மதித்து அதற்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

ஏராளமான நீதிமன்றங்கள்
சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து செயல்பட வைக்க வேண்டும், அதுதான் சிறப்பானதாக இருக்கும். நீதித்துறையினர் நினைத்து அரசுக்குப் பரிந்துரை செய்ததும், உடனே அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஒப்புதலை வழங்கினோம். இதன் மூலமாக சென்னையில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் இருந்து செயல்படப் போகின்றன.

அலைச்சல் குறையும்
இது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வசதி மட்டுமல்ல, வழக்கறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய வசதிதான். அலைச்சல் தவிர்த்து, அமைதியாகப் பணியாற்ற இது வழிவகுக்கும். உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் அறிவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

நீதித்துறைக்கு முக்கியத்துவம்
இந்த அரசு பொறுப்பேற்ற மே மாதம் 2021 முதல், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 6 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 35 புதிய நீதிமன்றங்கள், 54 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications