மலிவு விலையில் வீடுகளை விற்க வேண்டும்! ரியல் எஸ்டேட் அமைப்பினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
மலிவு விலையில் வீடுகளை விற்குமாறு ஸ்டாலின் அறிவுரை.
சென்னை: எல்லோரும் வாங்கத்தக்க வகையில் மலிவு விலையில் வீடுகளை விற்க வேண்டும் என கிரெடாய் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டுமானப் பணியில் புதிய தொழில்நுட்பங்கள் உலகத்தின் எப்பகுதியில் இருந்தாலும் கொண்டு வந்து அவற்றை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற CREDAI FAIRPRO 2023-ல் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;
''காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுக்கான பணிகளை ஒருங்கிணைத்து, மனை, மனை உட்பிரிவு மற்றும் நில வகைப்படுத்துதலுக்கான செயல்முறை நேரலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அகலம் குறைந்த சாலைகளுக்கு, தற்போது வழங்கப்படும் தளப்பரப்பு குறியீட்டினை (Floor Space Index) அதிகரிக்க வேண்டுமென்று கிரெடாய் அமைப்பினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை அரசு உரிய முறையில் பரிசீலித்து, சாதகமான முடிவை அறிவிக்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயரமான அல்லது உயரம் இல்லாத கட்டடங்களின் தளப்பரப்பு குறியீடானது, சாலையின் அகலத்தைப் பொறுத்து மேற்கொள்ளப்படும். தளப்பரப்பு குறியீட்டினை அதிகரிக்கும் நேர்வில், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வீடுகளை வழங்கிட இயலும்.
எனவே, கிரெடாய் உறுப்பினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு, மலிவு விலையில் வீடுகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுமானப் பணியில் நீங்கள் புதிய தொழில்நுட்பங்களை உலகத்தின் எப்பகுதியில் இருந்தாலும் கொண்டு வந்து அவற்றை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி, தரமான அதே சமயம் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications