கபடி பயிற்சி மையங்கள்.. பைசன் புகழ் மணத்தி கணேசன் வைத்த கோரிக்கை.. ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: பைசன் பட புகழ் மணத்தி கணேசன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென் மாவட்டங்களில் கபடி பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ள ஸ்டாலின், கல்வி தான் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த விழாவிற்கு நேரில் வந்து கபடி ஜாம்பவான் மணித்தி கணேசன் உரையாற்றி இருக்கிறார்.

அவரை ஏன் அழைத்தோம் என்றால், ஒரு கடைகோடி கிராமத்தில் இருந்து வந்த தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்றவர். அவர் இந்த மேடையில் ஓரிரு கோரிக்கைகளை முன் வைத்தார். நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்படும். தென் மாவட்டங்களில் நிச்சயமாக கபடி பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமத்துவ சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்.
ஆட்சி பொறுப்பு என்பது நம்முடைய லட்சியங்களை திட்டங்கள் மூலமாக வென்றெடுப்பதற்கான வழி. அதனால்தான் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் சமூக நல திட்டங்கள் கொண்டு வந்து, விளிம்புநிலை மக்களை முன்னேற்ற துணை நிற்கிறோம். அந்த வகையில் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்ட திட்டம் 2024ஐ நிறைவேற்றி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சட்டப்பூர்வ உறுதியை உருவாக்கி இருக்கிறோம். ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்வி தான் அடிப்படை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கக் கூடிய பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளோம்.
தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். இதன் மூலமாக ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரி நிறுவனங்களில் 2025-2026 கல்வியாண்டில் 135 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த காலங்களில் எம்சி ராஜா மாணவர் விடுதி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது அதனை ரூ.44.5 கோடியில் மாற்றி நவீன வசதிகளுடன் உருவாக்கியுள்ளோம்.
சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் 6 மாதிரி விடுதிகளை உருவாக்கி வருகிறோம். அதேபோல் விடுதி மேலாண்மை தகவல் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. சிசிடிவி, வருகை பதிவேடு உள்ளிட்டவை கணக்கு வைக்கப்படுகிறது. அதேபோல் அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவி திட்டம்.
உலகளவில் உள்ள டாப் பல்கலைக்கழகங்களில் படிக்க இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 2003ல் இருந்து 2021 வரை இந்த திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் 6 பேர்தான். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications