Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி திமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக தேர்தல் சிறப்பு மாநாட்டில்தான் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டேன் என நினைவுகூர்ந்துள்ளார் ஸ்டாலின்.

"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மாநாட்டு மடல். All Roads Lead to Rome என்று சொல்வார்கள். எல்லாச் சாலைகளும் ரோமாபுரி நோக்கிச் செல்கின்றன என்பது போல, எல்லாச் சாலைகளும் இப்போது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியை நோக்கியே பயணிக்கின்றன. கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் அன்புச் சகோதரர் கே.என்.நேரு அவர்களும் அவருடன் கழகத்தின் நிர்வாகிகளும் இணைந்து நின்று 'ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்' எனும் கழக நிர்வாகிகளின் தேர்தல் சந்திப்பு சிறப்பு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் செய்து வரும் நிலையில், மாவட்ட- ஒன்றிய - நகர- பேரூர் -கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும், கழகத்தின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், கழகத்தின் வெற்றிக்கான தேர்தல் பணிகளை முன்னெடுத்துப் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் திருச்சி நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாகி வரும் வேளையில், உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

mk stalin dmk trichy

திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்திடும் உறுதியுடன் 2026 தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான பாசறையாக விளங்கிடும் இந்த மாநாடு, நடைபெறும் இடம் சிறுகனூர். பெருகி வரப்போகும் கருப்பு - சிவப்பு உடன்பிறப்புகளின் அலை அலையான அணிவகுப்பு, மார்ச் 9 அன்று சிறுகனூரில் பெருங்கடலாகக் காட்சியளிக்கும்.

70 ஆண்டுகளுக்கு முன், 'அன்பில் அழைக்கிறார்' என 1956-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிற்குக் கழகத் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. 'தம்பி வா.. தலைமையேற்க வா' என மாநாட்டுத் தலைமைக்கு நாவலர் அவர்களை முன்மொழிந்து பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையும், அந்த மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களிடம், தேர்தலில் திராவிட முன்னனேற்றக் கழகம் போட்டியிடலாமா வேண்டாமா என உட்கட்சி ஜனநாயகத்துடன் வாக்கெடுப்பு நடத்தி, பெருவாரியான கழகத் தொண்டர்கள், தேர்தலில் கழகம் போட்டியிட வேண்டும் என்று வாக்களித்ததன் அடிப்படையில், தீர்மானம் நிறைவேற்றி, 1957-இல் முதல் முறையாகத் தேர்தல் களம் கண்டது நம் இலட்சிய இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம். காஞ்சியிலே பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றுச் சட்டமன்றம் சென்றார். எழும்பூரிலே இனமானப் பேராசிரியரும், பெரம்பூரிலே சத்தியவாணிமுத்து அம்மையாரும் எனக் கழகத்தின் சார்பில் முதன்முறையாக 15 பேர் சட்டமன்றத்திற்கும் இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.

எந்தத் திருச்சியிலே நடந்த மாநாட்டில் கழகம் தேர்தல் களம் காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டதோ, அந்தத் திருச்சி மாவட்டத்தில் அன்று இடம்பெற்றிருந்த குளித்தலை தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். கழக வரலாற்றில் திருச்சி மாநாடு திருப்புமுனையாக அமைந்தது.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு இயக்கத்தையும் ஆட்சியையும் தன் தோள்களில் சுமந்த முத்தமிழறிஞர் கலைஞர், 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் திருச்சியில் நடந்த மாநாட்டில்தான், நம் கொள்கைகளை ஒவ்வொரு தொண்டரும் ஓங்கி ஒலிக்கும் வகையில், ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதுதான் முதல் முழக்கம். பேரறிஞர் அண்ணாவின் அறவழியில் உழைத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்துத் தாய்த் தமிழைக் காத்திடவும், வன்முறை தவிர்த்து வறுமையை வென்றிடும் வகையில் மாநிலத்தில் சுயாட்சியையும், மத்தியில் கூட்டாட்சியையும் கொண்ட உண்மையான வலிமைமிக்க இந்திய ஒன்றியத்தை உருவாக்கிடவும் உறுதியேற்கும் வகையில் அந்த ஐம்பெரும் முழக்கங்கள் அமைந்துள்ளன. நம் கொள்கைப் பாதையில் மேற்கொள்ளும் இலட்சியப் பயணத்தில் உயிர்மூச்சாக இருப்பவை நம் உயிர்நிகர் தலைவர் திருச்சி மாநாட்டிலே வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களே.

ஒன்றிய அரசு இந்தியைத் திணித்தால் இன்று மட்டுமல்ல, அன்று முதலே அதற்கான எதிர்ப்புணர்வை உயிரைத் தியாகம் செய்து வெளிப்படுத்தி, தமிழைக் காப்பாற்றிய மண் திருச்சிதான். சிங்கத் தமிழன் செந்தமிழ்த் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி தன் தேக்கு மரத் தேகத்திற்குத் தீ வைத்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்த திருச்சி மண்ணில், தாய்த்தமிழ் உணர்வு அணையாத நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால்தான், இப்போது ரயில்வே கோட்டத்தின் நுழைவாயிலின் பெயரில் இந்தியைத் திணிக்கும் வேலையைச் செய்தபோது, திருச்சி மாவட்டக் கழகத்தினர் பொங்கி எழுந்து எதிர்ப்புணர்வைக் காட்டிய காரணத்தால், அங்கே இந்தி அகன்றது. தமிழ் நிலைத்து நின்றது.

பெருமைமிகு திருச்சியில் 1978 ஆம் ஆண்டிலும், 1986 ஆம் ஆண்டிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தி ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வைக் காட்டியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். பவள விழா கண்ட பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருச்சியில் நடந்த மாநாடுகள் திருப்புமுனைகளாக அமைந்திருக்கின்றன.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே திருச்சி சிறுகனூரில் நடந்த கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாட்டில்தான் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை என்ற அறிவிப்பை உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன். மக்கள் அளித்த ஆதரவால், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அமைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில், 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது. அரசியல் எதிரிகளின் சதிகளால் அதற்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே மூன்று மாத உரிமைத் தொகையையும், கோடைகால சிறப்புத் தொகையையும் வழங்கியதுடன் முதியோர் உதவித் தொகை பெறுவோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அரசின் பராமரிப்பு உதவி பெறுவோர் என ஏறத்தாழ 40 இலட்சம் பேருக்கும் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கழகம் முதன்முதலில் போட்டியிட்ட 1957 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் வாக்கு கேட்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அவருக்குப் பிறகு அரைநூற்றாண்டு காலம் கழகத்தைக் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞரும் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக வெளியிட்டதேர்தல் அறிக்கைகள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தவை. சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற உறுதியுடன், தனது தலைமையில் ஆட்சி அமைந்திட்ட 5 முறையும் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

இந்திய அரசியலில் ஈடு இணையற்ற தலைவரான கலைஞர் அவர்களை இயற்கை நம்மிடமிருந்து பிரித்த பிறகு, உங்களில் ஒருவனான என் தோள் மீது தலைமை என்ற பெரும்பொறுப்பை அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் சுமத்தினீர்கள். உங்கள் பேரன்பையும் பெரும் உழைப்பையும் நம்பி 2021-ஆம் சட்டமன்றத் தேர்தல் களத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வழிநடத்தக் கூடியவனாகக் களம் கண்டேன். இப்போதும் அந்தக் கூட்டணியை வழிநடத்துபவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன்.

வருகின்ற மார்ச் 9 ஆம் நாள் கழக உடன்பிறப்புகளின் திருமுகம் கண்டு நான் மகிழும் வாய்ப்பு அமையவிருக்கின்ற இதே திருச்சி சிறுகனூரில்தான் 5 ஆண்டுகளுக்கு முன் 2021 மார்ச் 7ஆம் நாள் உங்களின் திருமுகம் கண்டேன். அத்துடன், 7 அம்சத் திட்டங்களையும் வெளியிட்டேன். பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூகநீதி ஆகிய 7 அம்சங்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களைச் சிறுகனூரில் வெளியிட்டேன். அதில் முதல் இலக்காக நான் சொன்னது, அடுத்த பத்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது" என்பதுதான்.

கழக உடன்பிறப்புகளின் உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவாலும் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளிலேயே, இந்தியாவிலேயே 11.19% என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றே ஒரே மாநிலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசினாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடித்தளக் கட்டுமானத்தை நாம் வலுப்படுத்தியிருப்பதால் கல்வி, மருத்துவம், நீர்வளம், வேளாண்மை, உட்கட்டமைப்பு, சமூகநீதி என எல்லாவற்றிலும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தின் சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறோம்.

உடன்பிறப்புகளாம் உங்களால் அமைந்த நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் பெருமையை இந்திய அளவில் உயர்த்திக்காட்டியிருக்கிறது என்பதைப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும். 2021-இல் சிறுகனூர் மாநாட்டில் அதைத்தான் வலியுறுத்தினேன். பத்தாண்டுகாலம் தி.மு.க ஆட்சி தொடர்ந்து அமைந்திட வாய்ப்பளியுங்கள் என்று கேட்டேன்.

திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள், 'தமிழ்நாட்டைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகாலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதுபோல, 2026-இல் தொடரப்போகும் திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களை முன்வைத்து 'தமிழ்நாடு 2030' என்கிற 14 முக்கிய அம்சங்களை, மார்ச் 6-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற 'கனவு மெய்ப்படும்' நிகழ்வில் வெளிப்படுத்தினேன்.

'கனவு மெய்ப்படும்' நிகழ்வில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நான் உரையாற்றுவதற்கு முன்பு திராவிட மாடல் அரசின் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த 5 ஆண்டுகால சாதனைகளைப் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்கள். கடந்த தேர்தலுக்கு முன்பு சொன்னதையெல்லாம் எந்தளவில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சத்தை எதிர்கொண்டபடி எப்படியெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம், அதனால் தமிழ்நாடும் தமிழ் மக்களும் அடைந்துள்ள பயன்கள் என்ன என்பதை அவர்கள் எடுத்துரைத்த விதம் கண்டு, முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களைப் போன்ற உடன்பிறப்பாகப் பெருமை கொண்டேன்.

அந்தப் பெருமையுடன் நம் பணி நின்றுவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்வுடன், அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கான 14 அம்சங்களை அறிவித்தேன். பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்று 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களில் ஒருவனான நான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமிருந்த உழைப்பை என் குருதியோட்டத்தில் பெற்றவன்.

உடன்பிறப்புகளில் ஒருவன் என்ற உணர்வுடன் இந்த இயக்கத்திற்காகஉழைக்கிறேன். மற்ற உடன்பிறப்புகளைவிட முதன்மை உடன்பிறப்பான நான் கூடுதலாக உழைக்க வேண்டும் என அன்றாடம் பணியாற்றுகிறேன். என்னைப் போலவே உழைக்கும் பேராற்றல் பெற்றவர்கள்தான் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள். உங்களைக் காணும்போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே.. திருச்சி குலுங்கட்டும்... தி.மு.க வெல்லட்டும்.. சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+