பாடமாகும் விஜய்.. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு பெரிய பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை தொடர்ந்து சாலைகளில் பிரச்சாரம் செய்ய அரசு அடியோடு தடை விதித்துள்ளது. இது தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்களுக்கு தனி இடம், ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக தலைவர் வந்தால் நிகழ்ச்சி ரத்து, காவல்துறை பாதுகாப்புக்கு கட்டணம், தூய்மைப்படுத்தும் பணியை அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும். அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என பல விதிமுறைகள் கொண்டுவரப்படுகிறது.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். கரூரின் வேலுச்சாமிபுரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. மொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அரசியல் கட்சி தலைவரை பார்க்க வந்து 41 பேர் உயிரிழந்தது.. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. கடுமையான கூட்டநெரிசலில் மூச்சுவிட முடியாமலும், மரக்கிளை ஒடிந்து விழுந்து ஏற்பட்ட நெரிசலிலும் பலர் இறந்ததாக கூறப்படுகிறது.

Strict restrictions on political party meetings Tamil Nadu government s big plan

இந்த அசம்பாவிதம் நடந்த போதும், அவசர வழிகளை அருகில் உருவாக்கவே முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதான் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் விஜய் பிரச்சார நேரம் காலை 12 மணி என்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும் கூட்டம் கடுமையாக சேர காரணமாக அமைந்தது. இதேபோல் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்த பிரச்சனையை தொடர்ந்து தமிழக அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.. இனி எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்பதனை அடிப்படையாக கொண்டு அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்த போகிறதாம்.

தமிழக அரசு திட்டமிட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரங்கள் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை பற்றி பார்ப்போம்.

• பொதுவாக தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் எந்தக் கட்சியும், எந்த அமைப்பும், பெரிய கூட்டம் நடத்தும் முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் கூட்டம் நடைபெறும் இடம், கூட்ட நேரம், எவ்வளவு பேர் வருவார்கள், மேடை அமைப்பு போன்ற முழு விவரங்களும் முன்கூட்டியே கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். இது இப்போதே நடைமுறையில் இருக்கிறது.எனினும் அதில் பல்வேறு கடுமையான மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் நுழைவு-வெளியேற்றம், மருத்துவம், காவல், போக்குவரத்து உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும்.

• கூட்டம் எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும் என்ற வரம்பை அதிகாரிகள் முன்கூட்டியே நிர்ணயிப்பார்கள். அதற்கும் மேல் நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.

• மிகப்பெரிய கூட்டங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளனவா என்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அல்லது அவருக்கு இணையான அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்குழு சான்றிதழ் வழங்கிய பிறகே கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட உள்ளதாம்.

•சாலைகளில் கூட்டம் நடத்துவதற்கு தடை. காலி இடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அதாவது பொதுக்கூட்டமாக மட்டுமே நடத்த அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

•ஒவ்வொரு இடத்துக்கும் எத்தனை பேர் கூடலாம் என்ற எண்ணிக்கையை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அந்த அளவை மீறக்கூடாது. அதற்கு மேல் கூட்டம் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கும் பணியை காவல்துறையினர் செய்வார்களாம்.

• அதேபோல் கூட்டம் நடைபெறும் இடத்தில் குறைந்தது இரண்டு அவசர வெளியேறும் வாயில்கள் கட்டாயம் அமைக்க வேண்டும். தடுப்பு வேலி, பாதை வழிகாட்டும் பலகைகள், அவசர கால வசதி போன்றவை முன்கூட்டியே செய்யப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாம்.

• கூட்டம் நடைபெறும் இடத்தின் மிக அருகிலேயே மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை இருக்க வேண்டும்.

• பெரிய கூட்டங்களுக்கு கூடுதல் காவல்துறை படையினர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, அது சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் வசூல் செய்யப்படும்.

கட்டுப்பாட்டு அறை

• கூட்டம் நடைபெறும் இடத்தில் கட்சிகள் சார்பில் தன்னார்வலர்களை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரே சீருடையில் இருக்க வேண்டும்.

• எந்த கூட்டம் என்றாலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

• கூட்டம் நடைபெறும் இடத்தில், சில மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். (கரூரில் நடந்தது போல் இனி மக்கள் காலை முதல் இரவு வரை காத்திருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்)

• தலைவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே பின்னதாக வரலாம். அதற்கு மேல் காலம் தாழ்த்தினால் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

• கூட்டத்தை முழுவதுமாக சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கட்சியினர் தான் செய்ய வேண்டும். ஆனால் கண்காணிப்பு பணி அனுமதியை போலீசாரும் பார்க்கும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

• கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு "கட்டுப்பாட்டு அறை" அமைக்கப்படும். அங்கிருந்து தகவல்கள் உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

• அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளின் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைய வரும் சாலைகளில் வாகன நிறுத்த வசதி தனியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

• அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் அதிக சத்தம் உண்டாக்கும் ஒலி கருவிகள், அசம்பாவிதம் உண்டாக்கும் பட்டாசுகள், அபாயகரமான பொருட்கள் கொண்டு வரக்கூடாது.

• அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் மேடையின் அருகில் அத்துமீறி நுழைவதைத் தடுக்க தனி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும்.

• பொதுக் கூட்டத்தில் பெண்கள் சிக்காமல் இருக்க ஏற்பாட்டாளர்கள் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதாவது அவர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்க வேண்டும்.

• கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், வயதான முதியவர்களும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படும்.

• அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் விபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டால் ஏற்பாட்டாளர்களே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

• அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட கூட்டத்தில் விதிமுறைகள் மீறப்பட்டால், அந்த கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும்.

• கூட்டம் முடிந்தவுடன், ஒவ்வொரு பகுதியாக மட்டும் மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமாக வெளியேறினால் நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

• கூட்டத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். கட்சி ஏற்பாட்டாளர்கள் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மக்களிடமும் கருத்து கேட்கப்பட உள்ளது. அடுத்தாண்டு தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த கட்டுப்பாடுகளை விரைவில் அமலுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாம். இதில் சில மாற்றங்கள் அல்லது விதிகள் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+