இன்று ஸ்ட்ரைக்.. ஸ்டெர்லைட்போல் பெரிதாகும் எண்ணூர் ரசாயன ஆலை எதிர்ப்பு! ஆக்சனில் 33 கிராமங்கள்
சென்னை: எண்ணூரில் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி இன்று 33 கிராமங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்து உள்ளது கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் ரசாயன தொழிற்சாலை. வேளாண்மைக்குத் தேவையான ரசாயண உரத்தை உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவன ஆலையில் இருந்து கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தும் இந்த ரசாயன கசிவின் காரணமாக ஆலையை சுற்றி வசித்து வந்த கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல், இருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

ரசாயனம் கலந்த வாயு கசிவால் சுற்றி உள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டே கூட்டம் கூட்டமாக காலி செய்து வேறு பகுதிகளுக்கு சென்று இருக்கிறார்கள். மூச்சு திணறல் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையில் இருந்து வெளியேறியது அமோனியா என்பதை உறுதி செய்து இருக்கிறது.
இது குறித்து சம்பவம் நடந்த மறுநாள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் நேற்று இரவு (டிசம்பர் 26) மிதமான அளவு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வாயுக் கசிவால் அதிகாலை 4.30 மணியளவில் சின்னகுப்பம், பெரியகுப்பம் கிராமங்களில் மக்கள் அமோனியா கசிவை உணர்ந்து உள்ளனர். இதனை அடுத்து அந்த நிறுவனம் வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தையும், பைப்லைனில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து அது ஒரே நாளில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்து உள்ளது.
ஆகையால் இந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமோனியா எடுத்துச் செல்லும் குழாயின் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் வாயு கசிவுக்கு காரணமாக கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி எண்ணூர் மக்கள் 42 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 33 மீனவ கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications