"தனி ஒருவர்".. கிளம்பும் பகீர்கள்.. வர்ற சவாலையெல்லாம் .. செமையாக சமாளிக்கும்.. எடப்பாடியார்..!
முதல்வரின் இந்த 4 வருட கால சாதனைகள் அவருக்கு சாதகமாக அமைந்து வருகின்றன
சென்னை: சசிகலாவின் வருகையும், அவருக்கு அதிமுகவில் அளிக்கப்படும் வரவேற்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏகத்துக்கும் டென்ஷனை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டாலும் கூட.. அவர் அதை மிக மிக திறமையாக சமாளித்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் ஆச்சரியத்துடன் சொல்கிறார்கள். ஜெயலலிதா பாணியில் மிகத் திறமையாக, பதட்டமே இல்லாமல் எதிர்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சிகிச்சை முடிந்து வெளியே வரும் சசிகலா, அமமுகவிற்கு தலைமையேற்பாரா? இல்லை வெளியில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுவாரா? என்ற கேள்விகள் உள்ளன. சசிகலாவின் வருகையால் ஒரு பாதிப்பும் இல்லை என்று முதல்வர் உறுதியாக சொல்லியுள்ளார்.
சசிகலாவை பொறுத்தவரை கடந்த 30 வருஷமாக தமிழக அரசியலில் நேரடியாக பங்கேற்கவில்லையே தவிர முக்கிய லாபியாக இயங்கி வந்துள்ளார்... அதனால்தான் இன்றைக்கு இத்தனை அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்.

போஸ்டர்கள்
இப்போதுகூட தமிழக அமைச்சர்கள் சிலர் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. அணி மாறும் படலங்கள் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. யாரோ ஒரு ஆதரவாளர் சசிகலாவுக்கு வரவேற்பு தெரிவிக்கவும், அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.. ஆனால், இப்போது ஓபிஎஸ்-ன் மகனே சசிகலாவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. "இது அரசியல் சார்ந்த பதிவல்ல, என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு" என்று ஒரு வார்த்தையை பன்னீரின் மகன் கோர்த்து சொல்லியுள்ளார்.

போஸ்டர்கள்
அதேபோல இன்றும் கூட, சசிகலாவை வரவேற்று திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.. "33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக" என்று எழுதப்பட்டுள்ளது... சசிகலாவின் வருகையையும், தாக்கத்தையும் எடப்பாடியாரால் கட்டுப்படுத்தவே முடியாது என்றாலும், எடப்பாடியார் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்... இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன..

திறமை
ஒன்று, இந்த 4 வருடங்களில், அதிமுகவை மிக மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எடப்பாடியார். குறிப்பாக ஓபிஎஸ் மூலம் வந்த சவால்களை அழகாக சமாளித்துள்ளா், வென்றுள்ளார். இரட்டை தலைமை, முதல்வர் வேட்பாளர் விவகாரம், பாஜகவுடன் நல்லுறவு, ஓபி ரவீந்திரநாத்தின் பாஜக ஆதரவு பேச்சுக்கள், போன்றவைகளால் எடப்பாடியாருக்கு சிக்கல்கள் எழுந்ததை மறுக்க முடியாது. ஆனால் அத்தனையையும் பொடிப்பொடியாக்கினார் எடப்பாடியார்..

பிரச்சனைகள்
அத்துடன் தன் ஆதரவாளர்களையும் கைவிட்டுவிடாமல் அரண்போல காத்தார்.. இன்னொரு காரணம், தமிழகத்தின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டபடியே இருந்தார்.. கொரோனா போன்ற பிரச்சனைகளால் ஆட்சிக்கே ஆபத்து வரும் சூழல் எற்பட்ட போதும்சரி, எடப்பாடியார் அதை கையாண்ட விதமும், சமாளித்த விதமும் மிக முக்கியமானது. இவை தவிர, அருந்ததியர், வேளாளர் உட்பட பல்வேறு இன மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அவர்களின் வாக்குகளையும் வாரி சுருட்டி கையில் வைத்துள்ளார்.

ஆதரவு
மற்றொரு பக்கம், பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஆதரவையும், தன்னுடைய இதே போன்ற அறிவிப்புகளாலேயே பெற்றுள்ளார்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய சமூக வாக்குகள் எப்போதுமே தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.. எனவே இந்த 4 வருடத்தில் தமிழகத்துக்கு செய்த அத்தனையும் தன்னை கைவிட்டு விடாது என்ற மனஉறுதியே, இன்றைய எடப்பாடியாரின் முடிவுக்கு காரணமாக இருந்து வருகிறது.

சசிகலா
ஒருவேளை எடப்பாடியார் மனம் மாறினால், சசிகலா தலைமையை ஏற்று கொண்டால் அதிமுக வலுப்பெறும்.. என்றாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடியாரின் செல்வாக்கு அதிமுகவில் உள்ளது என்பதையும், அந்த செல்வாக்கை தனிஒருவராகவே பெற்றார் என்பதையும் மறுக்க முடியாது. இதைத்தான் அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக் காட்டி, ஜெயலலிதா போல டென்ஷனே இல்லாமல் எல்லாவற்றையும் அழகாக எடப்பாடியார் சமாளிக்கிறார் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications