ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்
சென்னை:நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தஞ்சையில் பிரச்சாரத்தில் பேசும் போது, "கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு, நான் சென்னைக்கு சென்றதும் அதிகாரிகள் என்னிடம் ஒரு கடிதத்தை காண்பித்தனர். எடப்பாடி பழனிசாமியின் முதலாளியாக உள்ள ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடிதம் அது. அதில், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அதனால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறதாம்.

அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று கூறி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதியமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. உண்மையில் தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது எடப்பாடி பழனிசாமி வாய்திறந்து கண்டிப்பாரா? அல்லது வழக்கம்போல அவதூறு பேசுவதற்கு மட்டும்தான் வாய் திறப்பாரா?" என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.
மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.
அரசியலமைப்பு சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" இவ்வாறு நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications