தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
சென்னை: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8 வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் தொடங்கியது. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 12 ஆத் தேதி முடிக்கப்பட்டு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையே 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. தேர்தல் நடைபெறுவதன் காரணமாக அந்த 2 தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அந்த வகையில் இறுதித் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் நேற்று மாலை முதலே தங்கள் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1, அல்லது 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. எனவே அதன்பிறகே பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications