விஜே சித்து முதல் மணிமேகலை வரை.. விளம்பரத்தால் வீணான பணம்! மொத்தமாய் சுருட்டிய சன்ரைஸ் கம்பெனி!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை அறிவித்த பல்வேறு ஆன்லைன் பட்டாசு நிறுவனங்கள் கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டதாக புகார் வந்திருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்த சன்ரைஸ் என்ற நிறுவனம் 85 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக கூறி முன்னதாகவே பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்திருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் தரமற்ற பட்டாசுகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுதான். தமிழகத்தின் மிகப் பிரபலமான சிவகாசியில் தீபாவளிக்கு என்று ஆயிரக்கணக்கான டன் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. கம்பி மத்தாப்பு தொடங்கி வானில் வர்ணஜாலம் காட்டும் வான வேடிக்கைகள் வரை விதவிதமான பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன.
தொடர்ந்து இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை ஆகின்றன. ஆனாலும் சிவகாசியில் பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் நேரடியாக சிவகாசிக்கு சென்று பட்டாசுகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

சிவகாசி மோசடி
அதே நேரத்தில் தற்போது ஆன்லைன் யுகத்தில் வீட்டில் இருந்தபடியே பட்டாசு ஆர்டர் செய்யும் நடைமுறையும் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி ஏராளமான மோசடி கும்பல்கள் கிளம்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி இந்த மோசடி கும்பல் ஆயிரக்கணக்கான மக்களிடம் லட்சக்கணக்கான பணத்தை திருடி இருக்கிறது. அப்படித்தான் ஒரு நிறுவனத்தின் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆன்லைன் பட்டாசு
சிவகாசியைச் சேர்ந்த சன்ரைஸ் என்ற பட்டாசு நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் மணிமேகலை ஆட்டோக்காரன் சேனல், விஜே சித்து போன்ற பிரபலங்களை வரவழைத்து தங்கள் கடைகளை விளம்பரப்படுத்தியுள்ளனர். மேலும் 3000 ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் 85 சதவீத தள்ளுபடி தருவதாக கூறி விளம்பரம் செய்திருக்கின்றனர்.
சன்ரைஸ் நிறுவனம்
இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு பணம் அனுப்பி இருக்கின்றனர். சிலருக்கு மட்டும் தரம் குறைந்த பட்டாசுகளை அனுப்பி வைத்துள்ளனர். பலருக்கு பணத்தையும் தரவில்லை பட்டாசையும் அனுப்பவில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட அந்த எண்ணையும் இணையதளத்தையும் தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் எண்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதோடு இணையதளம் பிளாக் செய்யப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தற்போது சமூக வலைதளங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு கடைகள் எனச் சொல்லி ஏராளமானோர் பணத்தை மோசடி செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications