பள்ளிகளுக்கு பறந்த குட் நியூஸ்.. அன்பில் மகேஷ் அதிரடி.. செம குஷியில் மாணவர்கள், பெற்றோர்கள்
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார் அன்பில் மகேஷ்
சென்னை: நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அறிவிப்பை இன்றைய தினம், நம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், சென்னை வேளச்சேரியில் விழா ஒன்றில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
அப்போது, "பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் குறைவாக இருப்பதால், மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சிரமப்படுகிறார்கள்.. அதனால் இதை சரிசெய்யும் முயற்சியாக, பள்ளி நேரத்திற்கு பிறகு அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படும்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

உள்கட்டமைப்பு
அதுமட்டுமல்ல, கடந்த பிப்ரவரி மாதமும் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாணவர்களுக்கான ஆங்கில வழி கல்வி குறித்து நீண்ட விளக்கம் தந்திருந்தார்.. அதாவது, "கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல்தான், மாணவர்களின் பெற்றோர் அரசு பள்ளிகளை தேடி வருகின்றனர்... இதற்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை பெற்றோர்களும் நிறையவே எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்றாற்போல் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் கூறியிருந்தார்.

ஆய்வகங்கள்
இந்த அறிவிப்பைதான் இன்றைய தினம் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக அறிவித்துள்ளார்.. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.. தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்து இன்று காலைமுதல் விவாதம் நடைபெற்றது.

அன்பில் மகேஷ்
அப்போது, பள்ளிக்கல்வி சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.. அந்த அறிவிப்பில்தான் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதைதவிர, அமைச்சர் வெளியிட்ட பல சிறப்பு அறிவிப்புகள் இவைதான்:

திறன் வகுப்பறைகள்
ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்... 2,713 நடுநிலை பள்ளிகளில் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ. 210 கோடியில் அமைக்கப்படும்... பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி, இரவுநேர காவலர்கள் பணி போன்ற பள்ளி பராமரிப்புக்கு ரூ. 100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்... கல்வி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட இணைக்கல்வி வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பள்ளி சென்னையில் ரூ. 7 கோடி மதிப்பில் கட்டப்படும்.

அண்ணா தலைமை விருது
பல்துறை அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும் அதன் தனிச் சிறப்பு மாறாமல் இருக்க ரூ. 25 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.. அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் 100 பள்ளிகளின் சிறந்த தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமை விருது வழங்குவதுடன் பள்ளிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.. 1,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறை பயிற்சி அளிக்கப்படும்..

ஹேக்கத்தான் போட்டிகள்
ரூ. 25 கோடி செலவில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்... மாணவர்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ரூ. 5 கோடி மதிப்பில் கலைத் திருவிழா நடத்தப்படும்..மாநில அளவில் 'ஹேக்கத்தான்' போட்டிகள் நடத்தப்படும்.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 25 லட்சம் செலவில் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்..

ஊஞ்சல் இதழ்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர்கல்வி மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மாதம் இருமுறை வெளியிடப்படும்.. ஆசிரியருக்காக கனவு ஆசிரியர் இதழ் வழங்கப்படும்... பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திற்கே சென்று கல்வி வழங்க ரூ. 8.11 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications