தென் மாவட்ட பயணிகளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.. சென்னை டூ நாகர்கோவில்.. இன்று அதி விரைவு ஸ்பெஷல் ரயில்
சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணி நிமித்தமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்னையில் இருக்கும் வெளி மாவட்ட மக்கள் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

சிறப்பு ரயில்கள்: இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக அவ்வப்போது, சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. தற்போது தாம்பரம் யார்டு பணிகள் காரணமாக முன்பதிவு இல்லாத அந்தியொதையா ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் - நாகர்கோவில்: இதனால், குறைந்த கட்டணத்தில் சொந்த ஊருக்கு சென்று வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தான், பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
புறப்படும் நேரம்: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே ஒரு வழி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று (02.08.2024) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் ஒரு வழி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் - 06005) மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நின்று செல்லும் இடங்கள்: இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 2 ஏசி கோச்கள், 11படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது பெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் கொண்டதாக இருக்கும்.
தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்: இதேபோல் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று (02.08.2024) இரவு 11 மணிப்பு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் - 06007) மறுநாள் காலை 6.40 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும். இதேபோன்று திருச்சியில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06008) மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications