கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்! ED-க்கு செக் வைக்கும் உச்சநீதிமன்றம்
சென்னை: ஏறத்தாழ 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, ஹேமந்த் சோரன் ஆகியோரை தொடர்ந்து செந்தில் பாலாஜியும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது, அமலாக்கத்துறையின் அதிகாரத்தை, உச்சநீதிமன்றம் வரம்புக்குள் வைக்க முயல்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதே வழக்கில் டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டார். இருவரும் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுடைய ஜாமீனுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவரை சிறையில் அடைக்க முடியும் என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறது. இருப்பினும் பிஎம்எல்ஏ சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் எப்படி நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி செந்தில் பாலாஜி வழக்கு வரை கேள்விகள் எழுந்தன.
சிசோடியா 17 மாதங்களும், கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் தலா 5 மாதங்களும், செந்தில் பாலாஜி 15 மாதங்களும் சிறையில் இருந்தனர். இவர்கள் மீது பதியப்பட்டது அனைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள்தான். ஆனால், வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை குறிப்பிட்ட தக்க அளவில் முன்னேறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்படாதபோது எத்தனை நாட்கள் சிறையில் இவர்களை அடைத்து வைத்திருக்க முடியும் என்பது அமலாக்கத்துறைக்கு எதிரான கேள்வியாக இருந்தது.
மணிஷ்சிசோடியா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கியபோது உச்சநீதிமன்றம் கூறியது கவனிக்கத்தக்கது. அதாவது, "சிசோடியா சுமார் 17 மாதங்கள் சிறையில் இருக்கிறார். ஆனால் அவர் மீதான வழக்கின் விசாரணை இன்னும் அமலாக்கத்துறையால் தொடங்கப்படவே இல்லை. வழக்கின் மீதான விரைவான விசாரண என்பது பாதிக்கப்பட்டவரின் உரிமை. அந்த உரிமையை அவர் இழந்திருப்பதை காண்கிறோம்.
சிசோடியாவை வரம்பற்ற காலத்திற்கு காவலில் வைத்திருப்பது, பிரிவு 21ன் கீழ் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை கடுமையாக மீறும் செயலாகும்" என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிசோடியாவுக்கு அடுத்தப்படியாக கைதான பிஆர்எஸ் தலைவர் கவிதா, 5 மாதங்கள் சிறையில் இருந்தார். கவிதாவின் ஜாமீன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "கவிதா மீது 50 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக 493 சாட்சியங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை கூறுகிறது. எனவே விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை. விசாரணைக் காவலை தண்டனையாக மாற்றக் கூடாது" என்று கூறி ஜாமீன் வழங்கியிருந்தது.
இதேபோல கெஜ்ரிவால் வழக்கிலும், விசாரணை உடனடியாக முடிவடைய வாய்ப்பில்லை என்றும், கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக ஆதாரங்களை நிரூபிக்க விசாரணை அமைப்புகள் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
தற்போது செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றம் மேற்குறிப்பிட்ட கருத்துக்களையே கூறியிருக்கிறது. அதாவது, "விசாரணை என்ற பெயரில் நீண்ட நாட்களாக ஒருவரை சிறையில் வைத்திருக்க அனுமதிக்க முடியாது" என்று கூறியிருக்கிறது.
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் சமீபத்திய கைது நடவடிக்கைகள், பழிவாங்கும் நோக்கத்துடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில் நீதிமன்றமும், விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து வருவது, இந்த விமர்சனங்களை உண்மையாக்கும் விதமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை வரம்புக்குள் கொண்டுவரும் வேலையை நீதிமன்றம் செய்துவருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications