நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை? தங்கம் தென்னரசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து விசாரிப்பதற்கு எதிராக தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
2006-2011-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார் தங்கம் தென்னரசு. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அனைவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: ஆனால் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இன்று விசாரணை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய். பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையின் போது, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இதேபோல தமது விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு எதிராக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வழக்கு பிப்ரவரி 5-ந் தேதி விசாரணைக்கு வருவதால் அன்றைய தினமே தங்கம் தென்னரசுவின் மேல்முறையீட்டு மனுவையும் விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றைய தேதிக்கு (பிப்ரவரி 5) ஒத்திவைக்கப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தங்கம் தென்னரசு மீதான வழக்கு என்ன?: 2006-2011 திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கம் தென்னரசு. தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விடுவித்த நீதிமன்ற உத்தரவு: இந்த வழக்குக்கு எதிராக தங்கம் தென்னரசுவும் அவரது மனைவி மணிமேகலையும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. ஆகையால் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மணிமேகலை ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பைத்தான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications