பரனூரில் சர்ப்ரைஸ், கலங்கும் கோவை கணியூர்.. தமிழகத்தில் 46 சுங்கச்சாவடிகளில் உயர்ந்தது கட்டணம்
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. கோவை மாநகரை ஒட்டியுள்ள கணியூர் சுங்கச்சாவடியில் காருக்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் சென்னையை ஒட்டியுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு முறை மற்றும் திரும்பி வரும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. வேலூர் பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை- வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த சாலைகள் எல்லாம் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. அப்படி 4 வழிச்சாலை, ஆறுவழிச்சாலை, 8 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட பகுதிகளில் சுங்கச்சாவடிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது. அதை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டினை பொறுத்தவரை மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொதுவாகவே ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுவது வழக்கம்.
அதுவும் எப்படி என்றால், சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும். ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் 46 சுங்கச்சாவடிகளில் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 46 சுங்கச்சாவடிகளுக்கு இன்று கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர் சுங்கச்சாவடி, பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, வேலூர் பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை- வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சென்னை வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, கோவை அருகே உள்ள கணியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கோவை மாநகரை ஒட்டியுள்ள கணியூர் சுங்கச்சாவடியில் காருக்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப் வாகனங்களுக்கு ஒரு முறை மற்றும் திரும்பி வரும் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மற்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications