2 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தபின் வாங்க.. மதிமுகவிடம் சொன்ன தவெக.. விஜய்யை டேமேஜ் செய்த வைகோ!
சென்னை: மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்தால், அவர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதன் மூலமாக முதல்வர் விஜய்யே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக வைகோ பேசி இருப்பது, தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் தவெகவில் உடனடியாக ஐக்கியமாகினர். விஜயபாஸ்கர் இன்னும் ஓரிரு நாட்களில் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால் தவெக தலைமை குதிரை பேரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை சோஃபா மாடல் அரசு என்று விமர்சித்தார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசியுள்ள சம்பவம் முதல்வர் விஜய்யின் இமேஜையும், டேமேஜ் செய்வதாக அமைந்துள்ளது.
அதில் வைகோ பேசுகையில், மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் சொன்னார். அவர்களின் வெற்றிக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார். இதனை செந்தில் செல்வனிடம் சொன்ன போது பதிலே சொல்லவில்லை.
அவர் திமுகவில் இருக்கப் போகிறேன் என்று போய்விட்டார். ராஜேந்திரன் எம்எல்ஏ-வாக தொடர்வேன் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு கட்சித் தலைவரிடம் உங்களின் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்துவிட்டு வரச் சொல்லுங்கள்.. அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று விஜய் நேரடியாக கூறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக மற்ற கட்சிகளின் எம்எல்ஏ-க்களிடமும் விஜய் தான் இப்படி பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் சி விஜயபாஸ்கர் குழுவை தான் முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இந்த அணியில் இருந்த விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தான் ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன் மூலமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பேசியதை போல், விஜய் தான் நேரடியாக பேசி அவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளாதாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலமாக விஜய்யின் இமேஜை வைகோ டேமேஜ் செய்துவிட்டதாக தவெகவினரே புலம்ப தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications