அயோத்தியை எங்க கிட்ட கொடுங்க.. அடையாளம் தெரியாம மாத்தி காட்டுறோம்! அகிலேஷ் யாதவ் வாக்குறுதி!
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களுக்கு மத்தியில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அயோத்தியை 'சியாராம் தாம்' என்ற பெயரில் சர்வதேச ஆன்மீக நகரமாக மேம்படுத்துவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் எக்ஸ் (X) பதிவு
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “பக்தி மற்றும் நேர்மையுடன் நாங்கள் இந்த உறுதிமொழியை கொடுக்கிறோம். புதிய அரசு அமைந்தவுடன், அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த ஒரு முன்மாதிரி ஆன்மீக நகரமாக மாற்றுவோம். உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் இங்கு உண்மையான ஆன்மீக உணர்வை அனுபவிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இறைவனின் ஆசியுடன், அயோத்தியின் 'சனாதன பெருமையை' சியாராம் தாமக மீட்டெடுப்போம். இதன் மூலம் அயோத்தி மக்களின் பாரம்பரிய உரிமைகளும் கௌரவமும் மீண்டும் நிலைநாட்டப்படும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
அகிலேஷ் யாதவின் இந்த அறிவிப்பு, முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது. முன்னதாக தியோரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “ராமர் கோயில் நன்கொடைகள் குறித்து கேள்வி எழுப்பி, ராம பக்தர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்” என்று சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“இன்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் அல்ல. இவர்கள் ஒரு காலத்தில் ஸ்ரீராமரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள். ராமர் கோயில் போராட்டத்திற்கு எதிராக நின்றவர்கள்” என்று முதல்வர் யோகி கடுமையாக விமர்சித்திருந்தார்.
பின்னணி என்ன?
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் நன்கொடைகளில் சுமார் 7 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில்தான், அயோத்தியை 'சியாராம் தாம்' ஆக மாற்றுவோம் என்ற புதிய முழக்கத்தை அகிலேஷ் யாதவ் முன்வைத்துள்ளார்.













Click it and Unblock the Notifications