கூட்டணி இல்லாமல் திமுக ஆட்சியை பிடிப்பது கஷ்டம்.. ஒரே போடாக போட்ட திருமாவளவன்
சென்னை: இனி வரும் தேர்தல்களில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று ஆ.ராசா, திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். இது பற்றி பரிசீலிப்போம் என்று ஸ்டாலினும் கூறியிருந்த நிலையில், கூட்டணி இல்லாமல் திமுக வெற்றி பெறுவது கடினமான காரியம் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், திமுக தனித்து போட்டியிடுவது என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம் என்றும் திருமாவளவன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. 108 இடங்களில் வென்ற நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தவகவுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன.

கடுமையாக விமர்சிக்கும் திமுக
இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம் பெற்றன. தேர்தல் முடிந்ததும் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறியதை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூட்டணியை விட்டு விலகி சென்ற கட்சிகளை இனி மீண்டும் கூட்டணிக்கு சேர்க்க கூடாது என்று திமுக தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூட தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிவைத்து விசிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் தனியார் ஆங்கில நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
கூட்டணி இல்லாமல் திமுகவால் ஆட்சிக்கு வர முடியுமா என்பது தெரியவில்லை. திமுக தனித்து போட்டியிடுவது என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அந்த கட்சியின் முடிவு என்பதால் அவர்களே இதை பற்றி தீர்மானிக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் 60 இடங்களில் திமுக வென்றது. கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சியை அமைப்பது கடினம்" என்று கூறினார்.
ஆ ராசா - வன்னி அரசு மோதல்
திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை திமுக கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ ராசா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுக கூட்டணியில் நின்று வென்றவர்களை அமைச்சரவையில் சேர்த்த தவெகவுக்கும் வெட்கமில்லை. சேர்ந்த கட்சிகளுக்கும் வெட்கம் இல்லை என்று ஆ. ராசா காட்டமாக கூறியிருந்தார். அதேபோல வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய விசிக நிர்வாகியும் தமிழக சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு கூறியதாவது:- தோல்வி ஏற்பட்டதில் இருந்தே மன உளச்சலில் பல விதமான உளறல்களை அவர் செய்து வருகிறார். விசிகவை, இடதுசாரிகளை விமர்சிப்பதன் மூலமாக திமுக என்ற கட்சியை பாஜகவோடு, பாஜக பாதையில் இழுத்து செல்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. திராவிட கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படும் விசிகவை அவர் விமர்சிப்பதன் மூலமாக அவதூறு கொட்டுவதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications