முற்றிலும் டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்.. 2வது டிரையல் விரைவில்.. சென்னைக்கு சர்ப்ரைஸ்.. இவ்ளோ வசதியா
சென்னை: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.. பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குவதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன.

ஓட்டுநர் இல்லா ரயில்கள்
மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளுக்கு அத்தியாவசியமாகி வருகிறது.. எனவே, மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது. அந்தவகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்து சர்ப்ரைஸ் தந்திருந்தது.
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கிமீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.
ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ அறிவித்திருந்தது.
இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டம் நடைபெற போகிறது.. இந்த சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளன.
பிறகு அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழித்தடத்தில் குறிப்பிட்ட 2.5 கி.மீ. தூரமான பூந்தமல்லியில் இருந்து முல்லைத் தோட்டம் வரை சோதனை ஓட்டமும் நடத்தப்பட உள்ளதாக கூறியிருந்தனர்..
மீண்டும் அதிரடி அறிவிப்பு
இந்நிலையில், முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் பல்வேறு இடர்பாடுகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்தது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தடங்கல்களை தாண்டி நள்ளிரவில் வெற்றிக்கரமாக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்தது.
தற்போது, அடுத்தக்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.. இந்த சோதனை ஓட்டத்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரையில் சுமார் 8 கி.மீ தூரத்திற்கு நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அநேகமாக வரும் ஏப்ரல் 20ம் தேதிக்கு மேல் இந்த சோதனை ஓட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications