சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் எப்போது தொடக்கம் தெரியுமா? இதோ வந்தாச்சு தகவல்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரணாய் காக்கும் வகையில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டத்தின் தொடக்க விழா, நாளை சென்னை எழும்பூரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அதிரடிப்படை ஒரே நேரத்தில் களமிறங்க உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். கோட்டையில் பொறுப்பேற்றவுடன் அவர் பல்வேறு முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் முதல் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், போதைப்பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைக்கும் திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" என்ற புதிய திட்டத்தை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்பு
இத்தகைய சூழலில் தான், தமிழக முதல்வர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் பிரத்தியேகமாக செயல்படவுள்ள இந்தச் சிங்கப்பெண் சிறப்புப் பிரிவுக்கு ஐஜியாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பொது இடங்களிலும், இணைய வழியிலும் நடக்கும் குற்றங்களைத் தடுத்து, அவசரக் காலங்களில் அவர்களுக்கு உடனடி விரைவுப் பாதுகாப்பு வழங்குவதே இப்படையின் முதன்மை நோக்கமாகும்.
அதிலும் குறிப்பாக பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த அதிரடிப்படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்தத் திட்டம் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
நாளை சிங்கப் பெண் திட்டம்
இதற்காக போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகைகளும் தீவிரமாக நடத்தப்பட்டன. ஆனால், முதலமைச்சரின் டெல்லி பயணம் மற்றும் சில தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் அன்றைய தினம் இந்தத் தொடக்க நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போது, "அடுத்த வாரம் சிங்கப்பெண் அதிரடிப் படைத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி சிங்கப்பெண் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீல நிற சட்டை, காக்கி பேண்ட்
இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடிப்படைக்கான பிரத்தியேக நீல நிறச் சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிறத் தொப்பி மற்றும் காலணிகள் அடங்கிய சீருடைகளும், வாகனங்களும் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவுடன், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியை உடனே தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...!!












Click it and Unblock the Notifications