திமுக மேடையில் குற்றவாளிக்கு திராவிட மரியாதை.. கேட்க பெரியாரிஸ்டுக்கு துப்பு இருக்கா? இடும்பை நறுக்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி சேகருக்கு சமஸ்கிருத மந்திரம் ஓத பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்களை இழிவாக எழுதி குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அவருக்கு திராவிட மாடல் மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பெரியாரிஸ்டுகள் கேட்க மாட்டார்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பவனம் கார்த்திக்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை அருகே அயப்பாக்கத்தில் வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்பகுதி ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன். முபெ சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் கலந்து கொண்டு பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்," உலகத்திலேயே வலிக்காமல் அடிக்கும் சவுக்கு கோயம்புத்தூரில் கிடைக்கிறது. எத்தனை அடி அடித்தாலும் ஒரு காயம் கூட படாது. செருப்பு போட மாட்டார். ஆனால் ஷூ போட்டு சொல்கிறார். அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான். இந்தியாவில் பிறந்தால் இந்தியன் தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன் அவ்வளவுதான். தேச விரோதி என்று சொல்ல யாருக்குமே தகுதி இல்லை. தேச விரோதி என்று குறிப்பிடுபவரை லூசு என்று தான் சொல்ல வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்," நான் எந்த கட்சியையும் சேராதவன். ஒரு நடிகனாக இந்த அரசியல் திட்டங்களை வரவேற்கிற முதலமைச்சர் ஸ்டாலின் நண்பனாக இருக்கிறேன். முதலமைச்சர் ஒன்றும் ஆறு வருடம் காவல்துறையிலிருந்து விட்டு அந்த வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. இனிமேல் என்னை யாரும் நகைச்சுவை சக்கரவர்த்தி எனக் கூற வேண்டாம். அதற்கு பதிலாக பாஜக தலைவர் அண்ணாமலையை கூறுங்கள் என பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.வி சேகருக்கு அப்பகுதியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் திராவிட மாடல் மரியாதை என மேடையில் கூறினார். இந்த நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய குற்றவாளிக்கு திமுக தரும் மரியாதை இதுவா என கேள்வி எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடுப்வனம் கார்த்திக்.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக எழுதிய விவகாரத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட எஸ்.வி. சேகருக்கு திமுகவின் மேடையில் அமைச்சர்களின் முன்னிலையில் சமஸ்கிருத மந்திரம் ஓத பரிவட்டம் கட்டி, மலர் மரியாதை செய்யப்படுகிறது.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) March 10, 2025
சமஸ்கிருதம் மந்திரம் ஓதி எஸ்.வி.சேகருக்கு மாலை… pic.twitter.com/TBzZHG6nps
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக எழுதிய விவகாரத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட எஸ்.வி. சேகருக்கு திமுகவின் மேடையில் அமைச்சர்களின் முன்னிலையில் சமஸ்கிருத மந்திரம் ஓத பரிவட்டம் கட்டி, மலர் மரியாதை செய்யப்படுகிறது.
சமஸ்கிருதம் மந்திரம் ஓதி எஸ்.வி.சேகருக்கு மாலை அணிவிப்பதை, 'திராவிட மாடல் மரியாதை' எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்து, நன்றி தெரிவிக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன். இந்த மானங்கெட்டத்தனத்தைக் கண்டிக்கத் துப்பு இருக்கா பெரியாரிஸ்டுகளுக்கு? இதுவா ஆரிய எதிர்ப்பு இயக்கம்?" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications