மதுரவாயல் டூ துறைமுகம்.. ஈரடுக்கு மேம்பாலம் சென்னைக்கே வரப்பிரசாதம்.. இத்தனை வசதியா? தமிழக அரசு மாஸ்
சென்னை: சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான ஈரடுக்கு சாலை திட்டம் துரிதமாகி உள்ளது. இந்த பாலம் எப்படி அமையப் போகிறது தெரியுமா? இந்த திட்டம் நிறைவேறினால், சென்னைக்கு கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் என்னென்ன தெரியுமா?
சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.. இதற்கான பணிகளும் ஆரம்பமாகின.. ஆனால், அதற்குள் அதிமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துவிட்டது.

ஆட்சி மாற்றம்: பிறகு, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்துவிட்டது. இதனால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.
இதற்கு பிறகு 10 வருடம் கழித்து, மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தது. உடனடியாக இதே திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தது.. மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத்திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது..
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இந்த திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதியும் வழங்கி, பணிகளும் துரிதமாயின. அந்தவகையில், சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் துவங்கப்பட்டன. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்க முனைப்பு காட்டப்பட்டது..
நம்பிக்கை: சமீபத்தில் இந்த மேம்பாலம் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்கவேண்டும் என்பதில் அரசும் உறுதியாக உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வசதிகள்: அந்தவகையில், மேம்பாலம் பணிகள் தற்போது துரிதமாகி வருகிறதாம். இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால், பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும் என தெரிகிறது..
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்படும் பறக்கும் சாலைக்கான மாதிரி படத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் வெளியிட்டபோதுகூட, இந்த முடிவுக்கு வந்தால், சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும் என்றும் பயண நேரம் குறையும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
துறைமுகம்: அதுமட்டுமல்ல, பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.. துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்துநெரிசல் இல்லாமல் துறைமுகம் செல்லும்.. அதே போல போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெளியே வர முடியும்.
இந்திய மாநிலங்களில் முதல்முறையாக 2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது. முதல் அடுக்கில், பஸ்கள், பைக்குகள், 4 சக்கர வாகனங்கள் செல்லும்... இது ஆறு வழி சாலையாக அமைய உள்ளது.
அதேபோல, 2 வது அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கனரக சரக்கு வாகனங்கள் இயங்கும் வகையில் 4 வழி சாலையாக அமைக்கப்படுகிறதாம்.. இந்த ஈரடுக்கு பறக்கும் சாலை மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்படவிருக்கிறது. அதில், 375 தூண்கள் கூவம் நதிப் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும் அமைய உள்ளதாம்.
கோயம்பேடு: கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரை இடையே உள்ள தூரத்தில் அமைக்கப்படும் ஈரடுக்கு பாலமானது 20.6 கிலோமீட்டர் தூரத்தில் 7 என்ட்ரிகள் வைக்கப்பட உள்ளதாம். சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும், காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும்.
ஆக மொத்தம், 4 பகுதிகளாக கட்டப்படும் இந்த சாலைத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் முடிவுடையும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பாலத்தை எதிர்நோக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications