தாம்பரத்தில் "அடி".. பிள்ளையாருக்கு "எருக்கம்பூ" வேணுமே.. பள்ளத்தில் மீனு இருக்குதா?.. பரிதாப விஷ்வா
சென்னை: ஆசை ஆசையாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட காத்து கொண்டிருந்தார் விஷ்வா.. அதுக்குள்ளேயே இப்படி ஒரு துயரம் நடந்து தாம்பரத்தை புரட்டி போட்டுவிட்டது.
சென்னை தாம்பரம் அடுத்த சானிடோரியம், சத்யா தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் விஷ்வா.. 11 வயதாகிறது.. இவர் ராமகிருஷ்ணபுரம் அரசு உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

நாளை விநாயகர் சதூர்த்தி கொண்டாடபட உள்ளதால் அதற்கு எருக்கம் பூ பறிக்க வேண்டும் என்று நினைத்துள்ளான். மேலும், நேற்று விடுமுறை என்பதால், சானிடோரியம் மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே மைதானத்திற்கு விஷ்வா தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருக்கிறான்.. இந்த பகுதியில்தான், எருக்கம்பூ இருப்பதாக தெரிகிறது. அதை பறிப்பதற்காக விஷ்வா வந்திருக்கிறான்..
பரிதாபம்: அப்போது, அங்கு மழை நீர் தேங்கி நின்றிருந்தது.. இதனால், அந்த பள்ளத்தில் மீன்கள் இருக்கிறதா? என்று எட்டிப்பார்த்துள்ளார் விஷ்வா. அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த தண்ணீரிலேயே தவறி விழுந்ததுடன், அந்த சேற்றிலும் பலமாக சிக்கிக்கொண்டான் குழந்தை.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஷ்வாவின் சக நண்பர்கள், சத்தம் போட்டபடியே ஓடிவந்துள்ளனர்..
வழியில் சென்றவர்களிடம் இதைப்பற்றி சொல்லவும், அவர்களும் பதறிப்போய், இதுகுறித்து சிடலப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தார்கள்.
சடலம்: பிறகு, தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கிய விஷ்வாவை மீட்டனர்.. ஆனால், இறந்த நிலையில்தான் விஷ்வாவை மீட்க முடிந்தது.. மகனை பார்த்ததும், விஷ்வாவின் பெற்றோர் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. பிறகு, சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவவழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் மழை பெய்தாலே, பெருங்களத்தூர் சாலையில் நீர்ப்பெருக்கு அதிகரித்துவிடுகிறது.. அதிக மழை பெய்தால் மழை நீர் தேங்குவதாக தாம்பரம், வண்டலூர், முடிச்சூர், கிளாம்பாக்கம் பகுதி மக்களின் குறையாக இருந்து வருகிறது. அதிலும் கிழக்கு தாம்பரத்திலிருந்து மேற்கு தாம்பரம் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பெய்த கனமழையின் காரணமாக சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் சேர்ந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் திணறிவிடுகிறார்கள்.
பெரும் சோகம்: ஏற்கனவே இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர்வடிகால் பணி தீவிரம் எடுத்து வருகிறது என்றாலும், விநாயகர் சதுர்த்திக்கு பூ பறிக்க சென்ற சிறுவன், மழைநீர் சேற்றில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
