எழும்பூருக்கு பதில் தாம்பரம்.. உழவன், அனந்தபுரி, சேது உள்ளிட்ட ரயில்கள் சேவையில் மீண்டும் மாற்றம்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக மேலும் 10 நாட்கள் உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை தென்மாவட்டங்களுக்கான முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கு நடைமேடை சீரமைப்பு, ரயில் பாதை மேம்பாடு உள்பட ரயில் நிலையத்தையே அடியோடு அற்புதமாக மாற்றும் திட்டத்தை ₹800 கோடியில் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகள் மார்ச் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையல் ரயில் சேவைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல முக்கிய விரைவு ரயில்கள் எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் அல்லது சென்னை கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications