ஈசிஆர் வீடியோ விவகாரம்.. சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை.. தாம்பரம் போலீஸ் விளக்கம்..நடந்தது என்ன?
சென்னை: ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை இரவு நேரத்தில் இடைமறித்து சில இளைஞர்கள் அத்துமீறும் வகையில் வெளியான வீடியோ தொடர்பாக தாம்பரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் பெண்கள் இரவு நேரத்தில் சென்ற போது, அந்த காரை இடைமறித்து நிறுத்தி சில இளைஞர்கள் அத்துமீறும் வகையில் நடந்த வீடியோ பல்வேறு தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காருக்குள் அந்த பெண்கள் பேசிய விஷயங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பெண்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈசிஆர் சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 26ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட பெண் கானத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தார். ஜனவரி 25ஆம் தேதியன்று நள்ளிரவு 2 மணியளவில் தன்னுடைய, காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது, இரண்டு கார்களில் (TN-75 E 6004 மற்றும் TN 09 BR 9988) வந்த 7, 8 நபர்கள் திடீரென வழிமறித்தனர் என்றும், அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு செல்ல முயன்றதாகவும், அந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து தங்களின் காரை, நீங்கள் இடித்துவிட்டு நிற்காமல் சென்றீர்கள் என்று கூறி தகராறு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் கானத்தூர் காவல் நிலைய மனு மீது விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன் விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் போலீஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications