விஜயகாந்த் இறுதி சடங்கில் தமிழில் மந்திரங்கள்.. சமஸ்கிருதம், தெலுங்கு தவிர்ப்பு! நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதி சடங்கில் ஒலிக்கப்பட்ட மந்திரங்கள் அனைத்தும் தமிழில்தான் ஒலிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விஜயகாந்த்தின் ஆரம்ப கட்ட வாழ்க்கை எப்படி போராட்டங்களுடன் தொடங்கியதோ, அதேபோல இறுதி கட்டத்திலும் கடுமையான போராட்டங்களுடன் விடைபெற்றிருக்கிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் மோதல், கை கொடுக்காத 2016 மக்கள் நலக்கூட்டணி, தொடர்ச்சியான வாக்கு வங்கி சரிவு என அரசியல் களம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது. அதே நேரத்தில், உடல் நலமும் அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை இவருக்கு தேவைப்பட்டது.

பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. நாளுக்கு நாள் உடல் பலவீனமடைந்து கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது.
ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்து, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது.
அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இதைகேட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினி, கமல் என திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் தீவுத்திடலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் ஒலிக்கப்பட்ட மந்திரங்கள் அனைத்தும் தமிழில்தான் ஒலிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது இறுதி சடங்கை நடத்திய புரோகிதர்கள் கூறியதாவது, “ஐயா விஜயகாந்த்துக்கு வைணவ சமயத்தின் பெருமாளுக்கு உண்டான நாமங்களை படித்து இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலோ, தெலுங்கிலோ கூடாது என்றும் தமிழில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறியிருந்தார்கள். எனவே நாங்கள் தேவாரம், திருப்பாவை, பெருமால் திருவாசகம், திவ்யபிரபந்தம், பட்டினத்தார் பாடல்களை பாடி இறுதி சடங்கை செய்தோம்” என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications