ரூ 30 கோடி மதிப்பில்... தமிழ்நாட்டில் புதிதாக 3 வேளாண் கல்லூரிகள்.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.
அதைத் தொடர்ந்து தேர்தலில் வென்று ஆட்சியமைத்திருந்த திமுக அரசு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.

வேளாண் பட்ஜெட்
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். அதேபோல அதற்கு மறுநாள், ஆகஸ்ட் 14ஆம் தேதி, தமிழக சட்டசபையில் முதல்முறையாக வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கை விவாதம்
அதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

3 புதிய வேளாண்மை கல்லூரிகள்
அப்போது வேளாண் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், "'வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும். தற்போது, வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது.

புதியதாக அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி
இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதியதாக அரசுத் தோட்டக்கலைக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022ஆம் ஆண்டில், கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும்'' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications