சிவகாசியில் காவலரின் மனைவிக்கு பிரசவத்தின்போது என்ன நடந்தது.. 5 மணி நேரம் நடந்த போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்த ரேணுகாதேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். பிரசவத்திற்காக ரேணுகாதேவி சிவகாசி மணிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கர்ப்பிணி மற்றும் குழந்தைக்கு நடந்த சம்பவம் கேட்டு உறவினர்கள் கொதித்து போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேணுகா தேவிக்கு 26 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ரித்திஷா என்ற பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பம் அடைந்த ரேணுகாதேவி, சிவகாசி மணிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.

நிறைமாத கர்ப்பிணியான ரேணுகா தேவிக்கு பிரசவத்தின்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில் பரிதாபமாக இறந்தார். அவர் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ரேணுகாதேவியின் குடும்பத்தினர் கடும்அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ரேணுகாதேவியின் குடும்பத்தினரும், உறவினர்களும் தனியார் மருத்துவமனையின் டாக்டர்களின் அலட்சியத்தால் தாயும், குழந்தையும் உயிரிழந்ததாக அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து பல்வேறு பகுதியில் இருந்தும் ரேணுகாதேவியின் உறவினர்கள் திரண்டு வந்து, மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.
தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ரேணுகாதேவி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் மருத்துவமனையில் முன்பு குவிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிவகாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications