எம்ஜிஆர் கட்சியை வைத்தே எம்ஜிஆர் கனவில் நடிகர் விஜய்..'எதிர்க்கட்சி' தகுதியை தாரைவார்க்கிறதா அதிமுக?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் அதன் தலைவர் நடிகர் விஜய்யின் பேச்சு உள்ளிட்ட அனைத்தையும் அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து புகழ்ந்து வருகின்றனர். அண்ணா திமுகவின் வாக்குவங்கியை இலக்கு வைத்துதான் விஜய் அரசியல் களத்துக்கு வந்திருக்கிறார் என கூறப்படும் நிலையில் நடிகர் விஜய் பக்கம் அந்த கட்சி சாய்வது என்பது எதிர்க்கட்சி தகுதியைக் கூட தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாரைவார்த்துவிட அதன் தலைவர்கள் தயங்கமாட்டார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பாஜக, திமுகதான் எதிரிகள் என பிரகடனம் செய்தார் அந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய். திமுகவை தமிழ்நாட்டின் பிரதானமாக எதிர்க்கக் கூடிய அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக. ஆனால் திமுகவுக்கு எதிரான தீவிர அரசியலையோ திமுகவுக்கு எதிரான வலிமையான கூட்டனியையோ அதிமுக உருவாக்காமல் இருந்து வருகிறது என்பது விமர்சனம்.

தேக்கநிலை அதிமுக: அதிமுகவின் இந்த தேக்கநிலையைத்தான் நடிகர் விஜய் சரியாக பயன்படுத்த களமிறங்கி இருக்கிறார்; அதுவும் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பது எல்லாம் அதிமுக தவறவிட்ட ஒன்றுதான்.. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக, அதிகாரப் பங்கு முழக்கத்தை எழுப்பிய போதே அதிமுக பகிரங்கமாக கூட்டணி ஆட்சி நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அப்படி அதிமுக தவறவிட்ட இடங்கள் ஒவ்வொன்றாக விஜய் தன்வயமாக்கி வருகிறார்.
டார்கெட் அதிமுகதான்: தீவிரமான திமுக, பாஜக எதிர்ப்பு, திராவிட அரசியல் முழக்கங்கள் இவை அனைத்தும் அண்ணா திமுகவை அழித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை அந்த இடத்தில் நிலை நிறுத்தும் முயற்சிகள்தான். ஆனால் இதனை வெளியே சொல்லவும் முடியாமல் விஜய்யை எதிர்க்கவும் முடியாமல், இப்போது அண்ணா திமுக தலைவர்கள் பலரும், திமுகவை எதிர்ப்பதால் விஜய் எங்கள் கொள்கைகளையே பேசுகிறார்; எங்களைப் போலவே செயல்படுகிறார் என ஈயம்பூசப் பார்க்கின்றனர்.
எம்ஜிஆர் கனவில் விஜய்: ஆனால் விஜய்யோ, எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக, அதன் வாக்கு வங்கி ஆகியவற்றை இலக்கு வைத்து சினிமாவில் ஒரே பாட்டில் கோடீஸ்வரராவதைப் போல ஒரே தேர்தலில் முதல்வராகி, எம்ஜிஆரைப் போலவே சாகும் வரை முதல்வர்தான் என்கிற உச்சகனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.
அதிமுக சீனியர்கள் ஆதங்கம்: இதற்கு எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுகவும் செங்கம்பளம் விரித்து ஆதரவு தந்து கொண்டிருப்பதுதான் சகிக்க முடியவில்லை என்கின்றனர் மூத்த அண்ணா திமுக தலைவர்கள். இப்படியே போனால் அதாவது விஜய் தீவிர அரசியலை கையில் எடுத்தால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அதிமுகவா? விஜய்யின் தவெகாவா? என்ற நிலை உருவாகும்.. எதிர்க்கட்சி தகுதியைக் கூட விஜய்யிடம் தாரைவார்த்துவிட்டு என்ன செய்யப் போகிறது அண்ணா திமுக? என்பதும் அந்த மூத்த தலைவர்களின் குமுறல்.












Click it and Unblock the Notifications