Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதாங்க அதிமுக ராசிங்கிறது! எப்பவுமே இப்படித்தான்! மடிமீது தானாக வந்து விழும் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா திமுகவுக்குதான் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் மிக எளிதாக கிடைத்துவிடுகிறது. அதிமுகவை தொடங்கி எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த காலம் முதலே பல தேர்தல் களங்கள் அண்ணா திமுகவுக்கு இயல்பாகவே சாதகமாக அமைந்துவிடுகின்றன என்பதை சரித்திரம் சொல்கிறது. 2026 சட்டசபை தேர்தல் களமும் நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது, திமுக கூட்டணி கட்சிகளின் கலகக் குரல்கள் ஆகியவை இயல்பாகவே அண்ணா திமுக கூட்டணியை வலுவடையச் செய்யக் காத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

1972-ம் ஆண்டு அண்ணா திமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். அதுவரை தமிழ்நாட்டில் திமுக vs காங்கிரஸ் என்கிற நிலைமைதான். ஆனால் 1977 தேர்தல் களம் அப்படி இருக்கவில்லை. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அண்ணா திமுக என்கிற புதிய கட்சியை தொடங்கினார் எம்ஜிஆர். அதுவரை களத்தில் திமுகவுக்கு எதிராக இருந்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோ காமராஜர் மறைவைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் என்பது காணாமல் போனது.

tamilnadu assembly election 2026 aiadmk dmk vijay 2026

இந்திரா காங்கிரஸில் ஒரு தரப்பும் ஜனதாவில் ஒரு தரப்புமாக இணைந்தன. இந்திரா காங்கிரஸ் கட்சியும் அதிமுகவும் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக களமாடின. எம்ஜிஆரின் திரைக் கவர்ச்சி, ரசிகர் பட்டாளமே கட்சியினராக உருமாறியது, காங்கிரஸ் கூட்டணி என அத்தனையும் அதிமுகவை அரியாசனத்தில் எளிதாக அமர வைத்தது.

ஆட்சிக் கலைப்பு கோபம்: 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் அதிமுகவுக்கு இயல்பான ஆதரவை பெற்றுத்தந்தது. 1977-ல் அமைந்த எம்ஜிஆர் ஆட்சியை 3 ஆண்டுகளில் மத்திய அரசு கலைத்தது. இதனால் 1980-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேலும் பல பிரிவுகளாக சிதறிப் போனது. இந்த தேர்தலில் அதிமுக- ஜனதா கட்சி கூட்டணி; திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்துவிட்ட அனுதாபம், திமுக- காங்கிரஸ் கூட்டணி மீதான கோபம் ஆகியவை மீண்டும் அதிமுகவுக்கு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தது.

எம்ஜிஆர் அனுதாப அலை: 1984-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது எம்ஜிஆர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். எம்ஜிஆருக்காக அன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒவ்வொரு குக்கிராமமும் பிரார்த்தனையில் உருகிக் கொண்டிருந்தது. அமெரிக்கா மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி உருவானது. திமுக கூட்டணியில் இடதுசாரிகள், ஜனதா கட்சி இடம் பெற்றன. ஆனால் எம்ஜிஆர் உடல்நிலை பாதிப்பு என்கிற அனுதாபப் பேரலை 3-வது முறையாக மிகப் பிரம்மாண்டமான வெற்றியை அதிமுகவுக்கு வாரிக் கொடுத்தது. 1980 தேர்தலில் அண்ணா திமுக- காங்கிரஸ் கூட்டனி 195 இடங்களில் வென்றதன் மூலம் எப்படிப்பட்ட அனுதாப அலை வீசியது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உடைந்த அதிமுக: எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து அண்ணா திமுக 2 ஆக பிளவுபட்ட நிலையில் 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இல்லாத தேர்தல் களம் அது. அதிமுக 2 ஆக சிதறி நடைபெற்ற இந்த தேர்தல் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. 1989-ல் திமுக- ஜனதா தளம்- சிபிஎம் ஒரு அணியாகவும் அதிமுக ஜெயலலிதா பிரிவு- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் அதிமுக ஜானகி பிரிவு- காங்கிரஸில் இருந்து வெளியேறிய சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு அணியாகவும் களம் கண்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்ட்டியிட்டது. இத்தேர்தலில் திமுகவுக்கு 150 இடங்கள் கிடைத்தன. ஆனால் 1991-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

ராஜீவ் படுகொலை: திமுக ஆட்சி கலைப்பைத் தொடர்ந்து 1991-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக ஜெயலலிதா தலைமையில் இரட்டை இலை சின்னம், காங்கிரஸ் கூட்டணியுடன்ப் தேர்தலை எதிர்கொண்டது. திமுக, அதிமுக இடையே மிகக் கடுமையான போட்டி இருந்தது. ஆட்சி கலைப்பு அனுதாபம், ஈழத் தமிழர் பிரச்சனை, மண்டல் கமிஷன், காவிரி நடுவர் மன்றம் என திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை அத்தேர்தலில் இருந்தது. ஜெயலலிதாவும் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தாக வேண்டிய நெருக்கடியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. ராஜீவ் படுகொலைக்கு திமுகவே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு திமுகவினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை அனுதாபம் அதிமுகவுக்கு சாதகமானது. அதிமுக 164 இடங்களிலும் காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் வென்றன. திமுக 2 இடத்தில்தான் வென்றது.

1996-ல் ரஜினி வாய்ஸ்: 1996 தேர்தலின் போது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் அடக்குமுறை, ஊழல் மீது மக்களுக்கு கோபம் இருந்தது. அத்துடன் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் உருவாக்கினார். திமுக, தமாகாவுக்கு நடிகர் ரஜினிகாந்தும் வாய்ஸ் கொடுக்க 1996-ல் திமுக வென்றது.

2001 சட்டசபை தேர்தல்: 2001 சட்டசபை தேர்தலின் போது காட்சிகள் தலைகீழாக மாறின. மத்தியில் வாஜ்பாய் ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தந்தது. அதனால் சட்டசபை தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி நீடித்தது. திமுகவின் இந்த முடிவால் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கை கோர்த்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என காங்கிரஸை உடைத்து தமாகா என்கிற தனிக் கட்சியை தொடங்கிய அதே மூப்பனார்தான் 2001 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.

பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததால் இடதுசாரிகளும் அதிமுகவுடன் கூட்டணியில் கை கோர்த்தது. 2001 தேர்தலில் அதிமுக, தமாகா, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள், பார்வார்டு பிளாக் என அத்தனை பிரதான கட்சிகளும் இயல்பாகவே கை கோர்த்து களமாடின. திமுகவோ பாஜக, விசிக மற்றும் தனிநபர்கள் நடத்திய கட்சிகள், ஜாதிக் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தது. பாஜகவுடனான திமுக கை கோர்ப்பால் இயல்பாகவே அதிமுக கூட்டணி வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

2006 தேர்தலில் ஓங்கிய திமுக கை: 2006 சட்டசபை தேர்தலிலும் காட்சிகள் மீண்டும் தலைகீழாக மாறின. பாஜகவை கைவிட்ட திமுக, காங்கிரஸ்- பாமக- இடதுசாரிகளை இணைத்து களம் கண்டது. அதிமுக கூட்டணியில் மதிமுக, விசிக என பலவீனமான கட்சிகள்தான் இருந்தன. இது திமுகவுக்கு சாதகத்தைத் தந்தது.

2011-ல் அதிமுகவுக்கு சாதகம்: 2011 தேர்தல் களத்தில் ஏராளமான ஊழல் புகார்களை சுமந்தபடி திமுக நின்றது. 2009 ஈழத் தமிழர் படுகொலை பழியையும் திமுக மீது சுமத்தப்பட்டிருந்தது. 2006-2011 திமுக ஆட்சிக் கால அதிகார துஷ்பிரயோகங்கள் மக்களை கோபப்படுத்தி இருந்தது. அந்த தேர்தலில் புதியதாக கட்சியைத் தொடங்கி இருந்த விஜயகாந்தின் தேமுதிக, அதிமுகவுடன் கை கோர்த்தது. அத்துடன் இடதுசாரிகளும் அதிமுக அணியில் இடம் பெற அமளி துமளி வெற்றியை அறுவடை செய்தது அதிமுக. திமுகவால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது.

2016 சட்டசபை தேர்தல்: 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக இரண்டுமே பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை. ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை மதிமுக, இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்டவை இணைந்த மக்கள் நலக் கூட்டணி சிதறடிக்க 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக.

2021 தேர்தல்: 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக- பாமக- தமாகா கூட்டணிக்கு எதிராக திமுக- காங்கிரஸ்- இடதுசாரிகள்- விசிக- மதிமுக- முஸ்லிம் லீக் என வலிமையான கூட்டணியை அமைத்து தேர்தலில் வென்றது.

அதிமுகவுக்கு சான்ஸ்: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் எம்ஜிஆர் ஆட்சி கலைப்பு, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை, ராஜீவ் படுகொலை, திமுகவின் பாஜக கூட்டணி, திமுகவின் 2ஜி ஊழல் என அதிமுகவுக்கு இயல்பாகவே களங்கள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. தற்போதைய நிலையில் ஆளும் திமுக அரசு வலிமையான கூட்டணியுடன் இருக்கிறது. ஆனால் தலையெடுக்கும் கூட்டணிக் கட்சிகளின் கலகக் குரல்களும் பாஜகவுடனான நெருக்கம், நடிகர் விஜய் அரசியல் வருகை ஆகியவை 2026 தேர்தல் களத்திலும் அதிமுகவுக்கு இயல்பான கூட்டணி பலத்தை தரக் கூடியதாகவே தெரிகிறது என சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+