தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.. இறுதிகட்டத்தில் அனல் பறந்த தலைவர்கள் பேச்சு!
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார பொதுகூட்டங்களை நடத்தக்கூடாது. ரோடு ஷோவில் ஈடுபடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன.

மாலையுடன் பிரசாரம் முடிந்தது
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரை, ரோடு ஷோ என அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர். கடந்த 37 நாட்களாக சூடு பறக்க நடந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
பிரசாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டங்களிலோ, ரோடு ஷோவிலோ ஈடுபடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக எந்தவித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
என்னென்ன கட்டுப்பாடுகள்
தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.
இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் முக ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பரப்புரை செய்தார். அங்கு அவர் பேசுகையில், ''இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த விரும்புகிறேன். அதனை தான் ஒற்றை குறிக்கோளாக கொண்டு உழைத்து வருகிறேன். மத்திய பாஜக அனைத்து மாநிலங்களையும் கண்ட்ரோல் செய்ய நினைக்கிறது. அவர்களுக்கு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களும் உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில், ''அம்மா இருசக்கர வாகனத் திட்டம்'.. இன்னொன்று அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு..! வேலைக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு தலா ரூ.10,000 மானியத்தில் பைக் வாங்க நிதியுதவி வழங்கப்படும் . வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு செலுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
சென்னையில் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ''ஒரு பக்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்காக காங்கிரஸை உள்ள தூக்கி போட்டுட்டாங்க. இன்னொரு பக்கம் பாஜக கூட அண்டர் க்ரவுண்ட் டீலிங். ஒரு பக்கம் காவி வேஷம். இன்னொரு பக்கம் கதர் வேஷம். நான் திமுக - பாஜக அண்டர் க்ரவுண்ட் டீலிங்னு சொன்னது இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்குது. மம்தா பானர்ஜியே ஸ்டாலினை பாஜகவோட சேர்த்து வச்சு விமர்சிச்சிருக்காங்க. ஆட்சியை இழந்ததுக்கு அப்புறம் இந்த திமுக காரங்க மோடி கால்லயும் அமித் ஷா கால்லயும் விழறாங்களா இல்லையானு பாருங்க. வரும் தேர்தலில் விசில் சின்னத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும்'' என்று பேசினார்.
காரைக்குடியில் சீமான்
சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பிரசாரம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ''50 ஆண்டு கால திராவிட ஆட்சியல் தமிழகம் எதை பெற்றது. ஊழலையும், மதுவையும் தவிர மக்களுக்கென்று அவர்கள் எதையும் செய்யவில்லை. இலவசங்களை அள்ளி வீசி மக்களை பிச்சையெடுக்க வைத்துள்னர். விவசாயி சின்னம் என்பது வெறும் அடையாளம் அல்ல. அது இந்த மண்ணின் உயிர் நாடு. மாற்றம் பேச்சில் அல்ல. செயலில் வர வேண்டும். 2026 தேர்தல் எதிர்காலத்திற்கான தேர்தல். நம் மண்ணை காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications