இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 18/02/2026: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை! தலைவர்களின் நச் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் இரு மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (18/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

முதல்வர் ஸ்டாலின்
அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்து தான் மாநில சுயாட்சி. நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர் ஒரு படத்தில் கூட குடிப்பதை போன்றோ, புகைப்பிடிப்பதை மாதிரியான காட்சிகளோ கிடையாது. இதனாலே அவரை மக்கள் வாத்தியார் என அன்புடன் அழைக்கின்றனர். இன்னைக்கு யார் யாரோ திரைப்படத்தில் நடித்துவிட்டு எம்ஜிஆரை போன்று கனவு காண்கிறார்கள். ஒருபோதும் அந்த கனவு நிறைவேறாது
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமலேயே சட்டப்பிரிவு 162-ன் கீழ் சட்டத்தை அமல்படுத்தியது அதிமுக. உங்களால் (திமுக) நீட் தேர்வை ரத்து செய்ய முடிந்ததா.. விளம்பரம் செய்வதில் தான் திமுக முயற்சி செய்து வருகிறது.
தொல் திருமாவளவன்
திமுகவின் வெற்றிக்காக பல காலங்களாக உழைத்து வருகிறோம்.. எனவே இம்முறை அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஆட்சியில் பங்கு கேட்பதால் ஒரு கூட்டணி உடைந்துவிடாது. தமிழ்நாடு அரசியலுக்கு பொருந்தாது என்று முதல்வர் கூறியுள்ளார். இது பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்.
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையினால், உண்மை வெளிவந்து இருக்கிறது. இந்த அறிக்கை மதவாத சக்திகளுக்கு ஒரு பாடத்தை புகட்டியிருக்கிறது. பாஜகவின் மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை வரக்கூடிய தேர்தல் உணர்த்தும்.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக கூட்டணி அறிவிப்பு விரைவில் வரும். ஆட்சியில் பங்கு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரு வாய்ப்பு வந்தால், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது. ஈஷா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் என அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் மோடி தமிழகம் வருவது நல்ல விஷயம். அதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் முதலில் அதை வரவேற்போம்.
மாணிக்கம் தாகூர்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம்.. ஆனால் internal சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது.. இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
நயினார் எடப்பாடி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள்.. ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா என்பது தான் பெரிய கேள்வி! அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது 'அதிர்ச்சி செய்தி' அல்ல - மெதுவாக 'அரசியல் உண்மை' ஆகி கொண்டிருக்கிறது.
தமிழிசை சவுந்தரராஜன்
நாங்கள் உண்மையாக, நேர்மையாக விவசாயிகளுக்கு செய்ய வேண்டியதை செய்வோம். தமிழ்நாடு அரசு மாதிரி பச்சை துண்டை போட்டுக்கொண்டு துண்டு விழுகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்வதில்லை. விவசாய மக்களுக்கு ஏமாற்றம் தான் தருவார்கள் என கூட்டணி கட்சிகளே அந்த துண்டை அணியவில்லை. விவசாயிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
சீமான்
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.. நாங்கள் விரும்புவது ஆட்சி முறை மாற்றம்.. வரும் 21 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
செல்வப்பெருந்தகை
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்று தமிழக மக்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்த மாநில சுயாட்சி என்ற பரிந்துரையை காங்கிரஸ் வரவேற்கிறது.












Click it and Unblock the Notifications