மதுரை வடக்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி, முதுகுளத்தூர், ஆர்கே நகர்..நடிகர் விஜய் எங்கே போட்டி?
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடக் கூடிய தொகுதி எதுவாக இருக்கும்? என்பது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது. சென்னை ஆர்கே நகர், மதுரை வடக்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றில்தான் நடிகர் விஜய் போட்டியிடக் கூடும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய் அதன் முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடத்தினார்.

வி.சாலை மாநாட்டில் பேசிய விஜய், 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம், கூட்டணி ஆட்சி அமைப்போம் என முழங்கி இருக்கிறார். 2026-ல் தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரும் நடிகர் விஜய்க்கு மட்டுமே வாக்களித்து அவரை முதல்வராக்க வேண்டும் என காத்திருப்பது போலத்தான் விஜய் பேச்சும் அமைந்திருந்தது.
இந்த நிலையில் முதல்வர் கனவில் இருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்கிற பேச்சுகளும் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கான சுவரொட்டிகளை ஒட்டும் போதே 'மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய்' என்றே அவரது கட்சியினர் போஸ்டர்கள் அடித்தனர். அத்துடன் மதுரையில் தலைமைச் செயலகத்தின் கிளை அமைப்போம் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருக்கிறது. மதுரையில்தான் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவும் விஜய் திட்டமிட்டிருந்தார். மதுரை விஜய்க்கு ராசியான நகரம் என்பதால் மதுரையில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
அதேபோல ராமநாதபுரம், ஆர்கே நகர், தூத்துக்குடி மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளும் விஜய் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களாம். மீனவர்கள், தலித்துகள் வாக்குகள் அனைத்தும் எம்ஜிஆருக்கு கிடைத்தது போல தமக்கே கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில்தான் இந்த தொகுதிகளை விஜய் தேர்ந்தெடுக்கலாம் என யோசனையில் இருக்கிறாராம். ராமநாதபுரம் தொகுதிதான் விஜய்யின் பூர்வீகம் என்பதால் 'மண்ணின் மைந்தனாக' ஓட்டு கேட்கவும் வசதியாக இருக்குமாம்.
முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. ஆகையால் காங்கிரஸ் அல்லது அதிமுகவின் மறைமுக ஆதரவு கிடைத்தால் இந்த தொகுதியில் களம் காணலாம் என்பதும் விஜய் போட்டு வைக்கும் கணக்காம்.
ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை சின்ன தொகுதி, மாஜி முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி என்கிற கணக்குகளை போட்டு வருகிறாராம் விஜய்.












Click it and Unblock the Notifications