தனபாலுக்கு திடீர்னு என்னாச்சு? முன்னாள் சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி.. ஏற்கனவே பிரஷர் இருந்ததே
சென்னை: அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. தனபால் உடல்நிலையில் என்ன பிரச்சனை? எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்று இதுவரை தெரியவில்லை.. எனினும் தனபாலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை தந்து வரும் நிலையில், விரைவில் உடல் நலம் தேறி அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு வயதில் இருந்தே பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அரசியலில் படிப்படியாக முன்னேறியவர் தனபால்.. அதிமுக ஆரம்பித்த காலத்தில், 1977ம் வருடம் நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..

படிப்படியாக முன்னேறியவர்
இதற்கு பிறகு, 1980, 1984, 2001ம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, தொகுதி மறுசீரமைப்பையடுத்து, 2011ம் ஆண்டில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையின் துணைத்தலைவராகப் பதவி வகித்தவர் தனபால்..
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அவருக்கு பதவியை வழங்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
சட்டப்பேரவை தலைவர் பதவியிலிருந்து ஜெயக்குமார் பதவி விலகியதையடுத்து அக்டோபர் 10ம் தேதி 2012ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் 19வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாஷ் ஜெயலலிதா
அமைச்சராக இருந்தவர் என்றாலும், தனபால் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தனபாலுக்கு சொந்த கட்சி நிர்வாகிகளே மரியாதை அளிப்பதில்லை என்ற பேச்சு அப்போது இருந்தது... இதற்கு பிறகுதான் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றபோது, அதிமுக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக தனபால் பெயரை ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
சபாநாயகருக்கான தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.. சபாநாயகர் என்பதால், சட்டசபையின் அத்தனை உறுப்பினர்களும் வணங்கி மரியாதை செலுத்தும் இடத்தை பெற்றார் தனபால்.. அந்தவகையில், 9 வருட காலம் சபாநாயகர் பதவியை திறம்பட வகித்து செயல்பட்டவர் தனபால்.
ஸ்டாலினுக்கு பாராட்டு
எதிர்க்கட்சி அரியணை ஏறியபோதும்கூட, எந்தவிதமான காழ்ப்புணர்ச்சிக்கும் அதிருப்திக்கும் ஆளாகாதவர் தனபால்.. கடந்த 2022-ல் நடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய தனபால், பெரியார் கருத்துக்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையும், தமிழ்மொழி அகரமுதலிக்கு நிதி ஒதுக்கியதற்கும், தமிழக முதல்வரை பாராட்டி பேசியிருந்தார்.
பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை தனபால் பாராட்டி பேசியதற்காக, தனபாலுக்கு அதே அவையில் ஸ்டாலின் நன்றியும் தெரிவித்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
உடல்நிலை பாதிப்பு
இந்நிலையில், தனபாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பாதிப்பு தனபாலுக்கு உள்ள நிலையில், மருத்துவமனையிலும் இதற்காக சிகிச்சை பெற்றிருந்தார்.. இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடல்நலம் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications