ஸ்டாலின் உறுமினால் போதும்.. பயந்து பதுங்கும் பூனையாக உள்ளது தமிழக பாஜக.. சு.சாமி பொளேர் அட்டாக்!
சென்னை: தமிழ்நாடு பாஜக மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, கடந்த சில மாதங்களாக பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவில் இருந்தாலும் கூட அவர் சொந்த கட்சியின் பல்வேறு முடிவுகளை விமர்சனம் செய்துள்ளார்.
மூத்த தலைவரான இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். பிரதமர் மோடியை ட்விட்டரில் வெளிப்படையாக சுப்பிரமணியன் சாமி சில இடங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார்.
அரசு கட்டுப்பாட்டிலிருந்து இந்து கோயில்களை விடுவிக்க போராட்டம்.. பாஜக சுப்பிரமணியன் சுவாமி அறிவிப்பு

விமர்சனம்
பல கொள்கை முடிவுகளை கண்டித்து உள்ளார். பாஜகவில் இருந்தாலும் சில பாஜக தலைவர்களை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். முக்கியமாக பெட்ரோல் டீசல் விலை குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் தொடர்ந்து இவர் விமர்சனங்களை வைத்து வந்தார். ஆனாலும் இவர் மீது பாஜக தலைமை பெரிதாக நேரடி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. முன்னதாக பிரதமர் மோடி அரசின் ரிப்போர்ட் கார்ட்.. நிதி நிலை - தோல்வி, வெளியுறவுத்துறை - தோல்வி, தேசிய பாதுகாப்பு - பீகாஸஸ் தோல்வி, எல்லை பாதுகாப்பு - சீனா ஊடுருவலால் தோல்வி, உள்நாட்டு பாதுகாப்பு - காஷ்மீரில் தோல்வி என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

சுப்பிரமணியன் சாமி
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக கட்சியை சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கு நான் மட்டுமே எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ்நாடு பாஜகவில் எல்லோரும் பதுங்கும் பூனைகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக இருக்கிறது தமிழ்நாடு பாஜக. தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் "சினிமா கலாச்சாரம்", கட்சியை சீர்குலைத்துவிட்டது, என்று சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.

பாஜக
சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி முக்கிய கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், அறநிலையத்துறை செயல்பாடுகள் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதை கட்டுப்பாட்டில் எடுப்பது தொடர்பான வழக்கில் 2014 ஜனவரி 6ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு வழங்கியது. அதில், இரண்டு முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம்
சிதம்பரம் பொது தீட்சிதர்கள், 'சீர்மரபினர்' என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தது. அதை மாற்றுவதற்கு இடமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது, இந்த கோவிலை தீட்சிதர்கள் பல நுாற்றாண்டுகளாக நடத்தி வருகின்றனர். கோவில் நன்றாக இருக்கிறது. கோவிலில் எந்த சீர்கேடும் இல்லை. அப்படி இருக்கும் போது அதை அறநிலையத்துறை கையில் எடுக்க முடியாது. நிர்வாகத்தில் பிரச்சனை இருந்தால் மட்டுமே அறநிலையத்துறை கோவிலை கையில் எடுக்க முடியும். அப்படியே தவறு இருந்தாலும், அறநிலையத்துறை மொத்தமாக கோவிலை கட்டுப்படுத்த முடியாது. நிர்வாக தவறுகளை சரி செய்த பின் அதை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அறநிலையத் துறைச் சட்டப் பிரிவு 45 என்ன சொல்கிறது என்றால், நியமனம் விதிகள் இயற்றப்படவில்லை என்றால் செயல் அலுவலர் நியமனம் செல்லாது.

உச்ச நீதிமன்ற விதி
உச்ச நீதிமன்ற விதிப்படி அரசுகள் செயல்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அரசியல் சாசன சட்ட பிரிவு இதைத்தான் சொல்கிறது. இந்த தீர்ப்புகள் அடிப்படையிலும், அரசியல் சாசன விதிகள், 25, 26ன் படியும் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட கூடாது. கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தமிழ்நாடு கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இல்லையென்றால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதாக கருதப்படும். நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும், என்று சுப்பிரமணியன் சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.