தமிழக பாஜகவில் 4 புதிய பொதுச்செயலாளர்கள்.. நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு.. சரத் குமார் நிலைமை?
சென்னை: தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநில அளவிலான பொறுப்புகள் நியமனம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேற்று ஜேபி நட்டாவை சந்தித்திருந்தார். இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஏற்கனவே அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கேற்ப பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனம்
கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்த போது, மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார். இதன்பின் நயினார் நாகேந்திரன் உடனடியாக யார் யாருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்து, டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி இருந்தார்.
டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்
இதன்பின் மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருகன் மாநாட்டு பணிகளில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டிருந்தார். தற்போது முருகன் மாநாடு முடிவடைந்த நேற்று டெல்லி பயணித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். அப்போது மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
4 புதிய பொதுச்செயலாளர்கள்
இந்த பட்டியலில் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆதரவாளர்களையும் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
யாருக்கு பதவி?
இதன்படி பொதுச்செயலாளர்களாக கேவி ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி செல்வம் மற்றும் கார்த்தியாயினி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை குஷ்பு மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு கூடுதலாக மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.
மீனாவுக்கு பொறுப்பு
அதேபோல் நடிகை மீனாவுக்கும் மாநில அளவிலான பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது, நடிகை மீனாவும் பங்கேற்றிருந்தார். சில நாட்களுக்கு முன் துணை குடியரசுத் தலைவரையும் சந்தித்திருந்தார்.
சரத்குமாருக்கு கிடைக்குமா?
இதனால் மீனாவுக்கு இம்முறை மாநில அளவிலான பொறுப்பு நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் சரத்குமாருக்கு மாநில அளவிலான பதவி அளிக்க பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால் சரத்குமார் தேசிய அளவிலான முடிவை எதிர்பார்ப்பதால், பாஜக தலைமை காத்திருக்க அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீனா பற்றி நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், திரைத்துறையில் இருந்து நடிகர் மீனா உள்ளிட்டோர் பாஜகவில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், பாஜகவில் சேர்வதற்காக ஏராளமானோர் வருகிறார்கள். அப்படி வந்தால் நிச்சயம் வரவேற்போம். திமுக ஆட்சி 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இதனால் அடுத்த எந்த கட்சி வெல்லுமா, அந்த கட்சி பக்கம் சாயத் தொடங்கி இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications