வானதி உட்பட 4 தமிழக பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு.. "அதை" பற்றி பேசவே இல்லையாமே..?
பிரதமர் மோடியை தமிழக 4 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினார்கள்
சென்னை: தமிழக பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும், இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.. அத்துடன், இந்த சந்திப்பின்போது, பிரதமரிடம் என்ன பேசினார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது பாஜக.. தாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்று உறுதியாக தெரியாமலேயே, 70 சீட் கேட்டார் எல்.முருகன்.. தனித்து போட்டியிட்டால் நாங்கள் அபார வெற்றி பெறுவோம் என்றார்.. கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றார்.
மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டுக்கு 2, 3 முறை வந்துபோனபிறகு, 20 இடங்களை ஒதுக்கியது அதிமுக மேலிடம்.. பிறகு, 20-க்கு 20-லும் வெற்றி என்றார் முருகன்.. இறுதியில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

முக்கியத்துவம்
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பல வருஷமாகவே பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில்தான், கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவில், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இது டெல்லி தலைமையையே சந்தோஷப்படவும் வைத்தது.. அதாவது 20 வருஷத்துக்கு பிறகு, அக்கட்சியின் கனவு நினைவாகி உள்ளது. இவர்கள் 4 பேருமே அதிமுகவைவிட அதிக அளவு கேள்விகளை திமுகவிடம் கேட்டு கொண்டிருந்தனர்.. இப்போது, இவர்கள் 4 பேருமே பிரதமரை டெல்லியில் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

வானதி சீனிவாசன்
இதற்காக, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நேற்று மாலையே சென்னையில் இருந்து இவர்கள் எல்லாரும் டெல்லிக்கு கிளம்பிவிட்டார்கள்.. இன்று பிரதமரை சந்தித்து பேசினர்.. இவர்களை சந்திக்க பிரதமர் மோடியும் நேரம் ஒதுக்கியிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எம்எல்ஏக்கள் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்.

ஆலோசனை
மேலும், பாஜக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்க உள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் அப்போது பிரதமர் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.. பிறகு, சில தமிழக நலன்கள் குறித்து பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக்களும் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக, மத்திய அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் திமுக கொண்டு வரும் தீர்மானங்களுக்கு பாஜக நிலைப்பாடு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேட்டி
இந்நிலையில், பிரதமரை சந்தித்து பேசியபிறகு, எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.. சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம்... தென் தமிழகத்திலும் அதிகமான தொழில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வைத்திருக்கிறோம்" என்றார். அதாவது, மிக முக்கிய பிரச்சனையான பெட்ரோல் டீசல் விலை குறித்தும் பேசவில்லை என்று தெரிகிறது. நீட் விவகாரம் குறித்து பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நீட் பற்றி பேசவில்லை" என்று பதிலளித்தார் எல்.முருகன்












Click it and Unblock the Notifications