செப்.26ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.. முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செப்.26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செப்.26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.26ம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதேபோல் இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்
குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அளவில் பேசு பொருளாக இருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களையும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விசாரணை அறிக்கை
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம்
ஏற்கனவே ஆகஸ்ட் மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இம்முறை சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்னதாக நடைபெறுவதால், அதுதொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட மசோதாக்கள்
அதேபோல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய சட்ட மசோதாக்கள், தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications