உதயநிதிக்கு போஸ்டிங் கன்பர்ம்டா? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடியது தமிழக அமைச்சரவை.. பரபர ஆர்வம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது கூடியிருக்கிறது.. அமைச்சர் பெருமக்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது.
முதலீடுகள்: ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 27 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன். தமிழக முதல்வர் ஸ்பெயின் சென்று முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, முதலீடுகளை தமிழகத்தில் ஈர்க்கும் வகையில் வருகிற 27ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார்.
அமைச்சரவை கூட்டம்: இந்நிலையில், தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று 13ந் தேதி காலை 11.00 மணிக்கு துவங்கியிருக்கிறது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, புதிதாக தமிழகத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, விரிவாக்கம் செய்ய உள்ள பெரு நிறுவனங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும். முதல்வர் வெளிநாடு செல்லும்போது, அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளதால், இந்தமுறையும் முதல்வரின் பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின்: அதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக சமீப நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.. தமிழக அமைச்சர்களும், இந்த தகவலை இதுவரை மறுக்காமல் உள்ளனர்.. எனவே, இந்த விவகாரம் குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட உள்ளதாக தெரிகிறது..
காரணம், உதயநிதி துணை முதல்வராவது குறித்த கேள்விக்கு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் பச்சைக்கொடியே காட்டி பதிலளித்திருந்தனர்.. வரும் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என பகிரங்கமாகவே போட்டுடைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்..
பழுக்கவில்லை: அதுமட்டுமல்ல, கடந்த 5ம் தேதி கொளத்தூரில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் ஆய்வு நிகழ்ச்சியின்போது, "விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கோரிக்கை வலுக்கிறதுஆனால் பழுக்கவில்லை" என்று பதிலளித்திருந்தார்..
ஆனாலும், துணை முதலமைச்சராக போவதாக சொல்லப்படுவது வதந்திதான் என்று அமைச்சர் உதயநிதி கூறி வருகிறார் .. எனினும், எனவே முதல்வர் தற்போது அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடும் எஎன்ற பலமான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது... இதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற சந்தேகமும் பரபரத்து வருகிறது.
அதேபோல, உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், தற்போது நடந்து வரும் இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications