Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிக்காம பெரிய ஆள் ஆகலாம்னு சொன்னா நம்பாதீங்க..கல்விய தான் திருட முடியாது! முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை "நீட்" போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம் எனவும், "படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்

mk stalin school education tamilnadu govt dmk politics

மேலும் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்கம், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு டேப்லெட், ஏழாவது தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் பொதுவாகவே நான் ஆர்வத்துடன் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், என்னை விட அதிகமாக கலந்துகொள்ளும் ஒருவர் இருக்கிறார். இந்த மேடையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி! அதனால், இந்த முறை நான் முன்பே, ரிசர்வ் செய்துவிட்டேன்.

தேர்வு முடிவுகள் வந்ததும், நானே நம்முடைய அமைச்சர் மகேஸ் அவர்களுக்கு ஃபோன் செய்து, "தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், நான் கலந்துகொள்ளும் முதல் அரசு விழாவாக, இந்தப் பாராட்டு விழாதான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்"என்று சொல்லியிருந்தேன். அதன்படி, இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் மாண்புமிகு தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், அவருக்குத் துணைநின்ற அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இந்த விழாவில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி மாணவர்களான உங்களை பார்க்கும்போது, எனக்கும் இளமை திரும்பி ஆற்றல் வந்துவிடுகிறது.

பொதுவாக, அரசியல் மேடைகளில்தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

முதல் விழா, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு.

இரண்டாவது விழா, பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு. மூன்றாவது, தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு TAB வழங்குவது. நான்காவது, அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்குவது. ஐந்தாவது, விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வாங்கியவர்களுக்கு பாராட்டு. இப்படியாக இந்த ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது. அதில் மிக முக்கியமான சில திட்டங்களின் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் "காலை உணவுத் திட்டம்", 27 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் "இல்லம் தேடிக் கல்வி", 28 இலட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் "நான் முதல்வன்", 23 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் "எண்ணும் எழுத்தும் திட்டம்", 30 இலட்சம் மாணவர்கள் பயனடையும் "வாசிப்பு இயக்கம்", "மாணவர் மனசு" என்ற பெயரில் "ஆலோசனைப் பெட்டி", 23 இலட்சம் பெற்றோர்களை உள்ளடக்கிய "பள்ளி மேலாண்மைக் குழுக்கள்", அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக "நம்ம ஸ்கூல்-நம்ம ஊரு பள்ளி" திட்டம், "நடமாடும் அறிவியல் ஆய்வகம்", "வானவில் மன்றம்", மாணவர்களை நல்வழிப்படுத்தும் "சிற்பி" திட்டம், தகைசால் பள்ளிகள், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் "கல்விச் சுற்றுலா திட்டம்", பள்ளி செல்லாதப் பிள்ளைகளைக் கண்டறிய "செயலி", சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு "சிறப்பு நிதி", பயிற்சித் தாள்களுடன் கூடிய "பயிற்சிப் புத்தகங்கள்", 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகள், கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, வகுப்பறை உற்றுநோக்கு செயலி, மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி - இப்படி நிறைய இருக்கிறது.

அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000/- வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது! அதுதான் "புதுமைப்பெண் திட்டம்". எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த "புதுமைப்பெண்" திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

"இதுதான் எனது கனவு" : மாணவர்களிடம் விளக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "தமிழ்ப்புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் கவனிப்பில், பள்ளிக்கல்வித் துறை ஒரு பொற்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் சொல்லலாம்.

mk stalin school education tamilnadu govt dmk politics

பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கு இருக்கும் நவீன வசதிகளை நம்முடைய ஊரில், நம்முடைய பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதேபோல, நம்முடைய பள்ளி மாணவ, மாணவியர்களை

வெளிநாடு சுற்றுலாவுக்கும் அதிகஅளவில் அழைத்துக்கொண்டு செல்கிறார். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.

இப்படிப்பட்ட முன்னெடுப்புகளுக்கு அவருக்குத் துணையாக நிற்பது ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டியது அரசினுடைய கடமை! பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கும் அங்கீகாரம்.

100 விழுக்காடு தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவது மூலமாக அந்த இலக்கை அனைவரும் அடையவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா! அந்த வகையில், தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்திய ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். இதே சாதனையை அடுத்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள்.

12-ஆம் வகுப்பில் 35 பேரும், 10-ஆம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு, 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற மாணவர்களையும் மனதார நான் பாராட்டுகிறேன்.

ஜூன் 10 பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த பதக்கம் பெற்றவர்கள், அடுத்து, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும். தம்பி உதயநிதி முன்னெடுப்பில், விளையாட்டிற்காக அதிகமான திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாகவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்போது எல்லாமே இணையதளத்தில் இருக்கிறது. A.I. என்று சொல்லும் செயற்கை நுண்ணறிவு இப்போது பெரிய பேசும்பொருளாக ஆகியிருக்கிறது. புதிய வளர்ச்சிகளுக்கேற்ப நம்மை 'அப்டேட்' செய்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

பள்ளிக் கல்வித் துறையை நவீனப்படுத்த பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு 'TAB' என்னும் கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன்.

"இதுதான் எனது கனவு" : மாணவர்களிடம் விளக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.

முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். இது எல்லாமே உங்களுக்காகத்தான். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் "ஃபுல் ஸ்டாப்" தெரியக் கூடாது. 'கமா' தான் தெரியவேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங். Make Tamil Nadu proud!

கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை "நீட்" போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். "நீட்" போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை!

கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். "படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன்! உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்! All the best!" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+