பாவ புண்ணியம்.. பஞ்ச் பேசி பஞ்சரான மகாவிஷ்ணு! நேரடியாக களத்தில் இறங்கிய முருகானந்தம்.. என்னாச்சு?
சென்னை : அசோக் நகர் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளை மாணவர்களிடையே பிற்போக்குத்தனமாக பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். மகாவிஷ்ணுவை அரசு பள்ளிகளில் பேசுமாறு பரிந்துரை செய்தது யார் என்பது குறித்து கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது..
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.
இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகம் வந்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் அசோக் நகர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில், இரு நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் என கூறினார்.
மேலும் இது தொடர்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை தமிழரசியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், நடந்தது என்ன? நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார்? என்பது பற்றி நாளைக்குள் கடிதம் மூலம் பதில் அளிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரடியாக விசாரணை நடத்தி இருக்கிறார். மகாவிஷ்ணுவை ஒரே நாளில் இரு அரசு பள்ளிகளில் பேச அழைத்தது எப்படி? இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அவரை பரிந்துரை செய்தது யார்? அவரிடம் அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக பெற்றது எப்படி? நன்கொடை பெற்ற பின் அது தொடர்பாக முறையாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், இது தொடர்பாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications