மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்.. ஒடுக்கப்பட்டவர்களை நோக்கி நீளும் ஒளி!
சென்னை: நரிக்குறவர், இருளர் கணக்கெடுப்பு தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை பேசியதற்காக பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில்தான், முதல்வரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சமீபத்தில் நரிக்குறவல் மற்றும் இருளர் பழங்குடியினத்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல நலத் திட்டங்களை வழங்கினார்.

முதல்வர் உதவி
திருக்கழுக்குன்றம் வட்டம் பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 நபர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ்கள் வழங்கினார் ஸ்டாலின்.

வளர்ச்சிப் பணிகள்
மேலும் 34 நபர்களுக்கு நரிக்குறவர் சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுயவேலை வாய்ப்பினை உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் கடனுதவி, சிறுதொழில் செய்வதற்கான வங்கிக்கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கடனுதவி, 75 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல், மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் நிறுவனத்தின் மூலம் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 2 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ஆணை என மொத்தம் 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இறையன்பு கடிதம்
இந்த நிலையில், அடுத்தகட்டமாக, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமம், பகுதிகளை நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
அப்பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும் , சம்பந்தப்பட்ட துறைகள் திட்டங்கள் வாரியாக அளிக்க பயன்களையும் கண்டறிந்து பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்பு அலுவலர்
மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான, அரசின் சார்பாக மேற்கொள்ளக் கூடிய அனைத்து உதவிகளையும் முழுமையாகக் கண்டறிய வேண்டும். முழுமையான ( exhausthve ) தேவைகள் மதிப்பீடு பட்டியல் (Needs Assessment List ) தயார் செய்யப்பட வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications