திமுகவை தலைகுனிய விடமாட்டேன்! ஸ்டாலினுக்கு அவப் பெயர் என்னால் வராது! உருக்கமாக பேசிய கேஎன் நேரு
சென்னை: அமைச்சர் கே.என் நேரு பொறுப்பு வகிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடைபெற்றதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது திமுகவுக்கும் அமைச்சர் நேருவுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தன்னால் திமுகவுக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்தவித அவப்பெயரும் வராது என உறுதியாக கூறியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றை கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த துறையில் காலியாக இருந்த 2500க்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் மோசடி தொடர்பாக சோதனை நடத்திய போது ஒரு மிகப் பெரும் ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது தமிழக காவல்துறைக்கு.. அந்த கடிதத்தில் நகராட்சி நிர்வாக துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை ஹவாலா முறையில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், 2538 பணியிடங்களில் 150-க்கும் மேற்பட்டோர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழக வேலைவாய்ப்பு ஊழல்
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னே பணி உறுதி செய்யப்பட்டதற்கான உரையாடல், வாட்ஸ் அப் பதிவுகள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும் லஞ்சத் தொகை ஹவாலா கும்பல் மூலம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக உடனடியாக முதற்கட்ட விசாரணையை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு 332 பக்க விரிவான அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.
கே.என்.நேரு பதில்
வழக்கம்போல் மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கை தான் இது என திமுக கூறியிருக்கிறது. இந்த நிலையில் தன்னால் திமுகவுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த கெட்ட பெயரும் ஏற்படாது என கூறி இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சியில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், ஏதேதோ பொய்யான குற்றச்சாட்டுகளை நம் மீது சுமத்தி வருகிறார்கள். என்னால் திமுகவுக்கும் திமுக தலைவருக்கும் எப்பொழுதும் எந்த விதமான கெட்ட பெயரும் ஏற்படாது.
தமிழக காவல்துறை விசாரணை
அமலாக்கத்துறை எங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போது சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறி இருக்கிறது. அதை ஆய்வு செய்ய வேண்டும் என தான் போலீசாருக்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு போலீஸ் அதனை முறையாக ஆய்வு செய்யும். முறைகேடு நடந்ததா இல்லையா என்பதை காவல்துறை விசாரிக்கும். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. திமுகாவை மிரட்ட வேண்டும் என்பதற்காக கூட அமலாக்கத்துறை இவ்வாறு செய்திருக்கலாம். திமுகவை பொருத்தவரை யாரும் யாரையும் ஓரம் கட்டும் வேலையை செய்யவில்லை. தேர்தல் வரும்போது எதிர்க்கட்சிகளை மிரட்டுவது மத்திய பாஜகவின் வழக்கம். இது தொடர்பான விசாரணையில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம்" என கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications