Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகத்துக்கு அழகல்ல..விகடன் இணையதளம் முடக்கம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: " இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

mk stalin union govt

இந்த சர்ச்சை தொடர்பாக விகடன் குழுமம் கூறியுள்ளதாவது: நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.: "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே","அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் 'சட்டவிரோதமாக' குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார். இதனால், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் இழிவான முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக, பிரதமர் மோடி பேசாமல் இருந்ததை சுட்டிக்காட்டி கடந்த 10-ஆம் தேதி, விகடன் பிளஸ் இணைய இதழில் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விகடன் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் சட்ட அமலாக்கத்துறையால் விகடன் இணையதளம் திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பது, கருத்துரிமைக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இத்தகையை இழிவான செயல் கடும் கண்டனத்துக்குரியது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் மோடி அரசு, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான கொடுஞ்செயலை சுட்டிக்காட்டியற்காக, விகடன் இணையதளத்தை முடக்குவது அச்சுறுத்தும் நடவடிக்கையே தவிர, வோறொன்றுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட அடிப்படை உரிமை, அதைப் பறிப்பதைக் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. எனவே, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு அச்சுறுத்தும் முடிவைக் கைவிட்டு, முடக்கப்பட்டிருக்கும் விகடன் இணையதளத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விகடன் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு இணையதளத்தை முடக்கியிருக்கலாம் என விகடன் நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்கும் என்று உறுதியளிக்கிறது.

கனிமொழி எம்பி: ஊடகங்களை முடக்குவதும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதும் ஒன்று. இதழியல் துறையில் நூற்றாண்டு கானும் விகடன் நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல். மத்திய அரசு உடனடியாக முடக்கப்பட்ட இணையதளம் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஊடக சுதந்திரம் காக்க ஒருமித்த குரல் கொடுப்போம்.

மதிமுக வைகோ எம்பி: தமிழ்நாட்டின் சமூக அரசியல் பண்பாட்டுத் துறையில் இரண்டறக் கலந்திருக்கும் விகடன் பத்திரிக்கை இதழியல் துறையில் நூற்றாண்டு கண்ட சிறப்புக்கு உரியதாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து விகடனில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்காக விகடன் இணையதளத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கி இருக்கிறது. நெருக்கடி காலத்தை அடிக்கடி நினைவூட்டுகிற பிரதமர் மோடி ஆட்சியில் நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு ஊடக பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை, எல்லைகளற்ற செய்தியாளர்கள் (சுளுகு) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையில், உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மதிப்பிடப்படுகிறது. 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2024-இல் இந்தியா 159ஆவது இடத்தில் உள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். விகடன் இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை ஒன்றிய அரசின் சட்ட அமலாக்கத்துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டதைக் கண்டிக்காத ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்த கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடனின் இணையதளத்தையே முடக்கி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கருத்துப்படங்களை வெளியிட்டு அரசுகளின் குற்றம், குறைகளை எடுத்துரைப்பதும், பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தக் கோருவதும், அநீதிகளை எதிர்ப்பதும்தான் ஊடகங்களின் தலையாயக் கடமை; முதன்மைப்பணி! அந்த அடிப்படையில், இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருத்த அவமானம்; தலைகுனிவு என்பதைத்தான் அந்தக் கருத்துப்படம் எடுத்துரைக்கிறது. அமெரிக்க அரசின் ஆணவப்போக்கைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஒன்றிய அரசின் கையாலாகாத்தனத்தையே விகடன் கருத்துப்படமாக வெளியிட்டிருக்கிறது. அது பிழையோ, குற்றமோ, சட்டவிரோதமோ இல்லை. அது விகடன் நிறுவனத்தின் கருத்துரிமை; விமர்சனப்பார்வை! அதனை செய்தற்காகவே விகடனின் இணையதளத்தை முடக்கியது சனநாயகப்படுகொலை! பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் இருந்தால்தான் அந்நாடு சுதந்திர நாடு! அத்தகைய அடிப்படை உரிமைகளே இங்கு பறிக்கப்படுமென்றால், இது விடுதலைபெற்ற நாடா? இல்லை! அடிமை நாடா? எனும் கேள்வி எழுகிறது. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு எதிரான கொடும் அச்சுறுத்தல். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக நூற்றாண்டுப் புகழ்பெற்ற விகடன் நிறுவனத்தின் இணையப்பக்கத்தையே மொத்தமாக முடக்குவார்களென்றால், இங்கு அவசரநிலை நிலவுகிறதா? இல்லை! மக்களாட்சி நீடிக்கிறதா? எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்! இது சனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கக்கூடிய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி அச்சுறுத்தல்! இந்தியக் குடிமக்களின் கை,கால்களில் விலங்கிட்ட அமெரிக்க அரசின் செயல்பாட்டைக் கண்டிக்காத பாஜக அரசின் செயல்பாடு தேசப்பக்தி! அதனை எதிர்த்துக் குரலெழுப்பிய விகடன் நிறுவனத்தின் செயல்பாடு தேசவிரோதமா? வெட்கக்கேடு! விகடனின் இணையப்பக்கத்தை முடக்கியதன் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது பாசிச முகத்தை மீண்டுமொரு முறை வெளிக்காட்டியிருக்கிறது.

இச்சமயத்தில், கருத்துரிமைக்கு எதிராகக் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ள விகடன் நிறுவனத்திற்கு தார்மீக ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன். இத்தோடு, முடக்கப்பட்டுள்ள விகடன் இணையதளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+